

ஒரு சட்டமன்றத்தின் சபாநாயகர், கட்சி சார்பின்றி அவையை நடத்த வேண்டும். அவையின் நடவடிக் கைகளை நடத்துவதில் அவருக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு உருவானவை.
அதற்கு முன்பே, ஜனநாயகத்தின் விழுமி யங்களான பக்கச்சார்பின்மை, நடுநிலை, நீதி உணர்வு போன்றவற்றைச் சட்டமன்றத்தில் செயல்படுத்தியதில் ஜெ.சிவஷண்முகம் பிள்ளைக்கு முக்கியப் பங்குண்டு.
சுதந்திரத் தமிழகச் சட்டமன்றத்தின் முதல் சபாநாயகர் ஜெ.சிவஷண்முகம், 1946 முதல் 1955 வரை சபாநாயகராகப் பதவி வகித்தார். இதற்கு முன்பு 1937இல் சென்னை மேயராகப் பதவி வகித்த அனுபவம் அவருக்கு உண்டு. 17.08.1955 முதல் 16.08.1961 வரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) உறுப்பினராகவும் 1962 முதல் 1968 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
பிரிட்டிஷ் முன்னுதாரணம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் பிறந்த சிவஷண்முகம், லயோலா கல்லூரியில் இளங் கலையும் மாநிலக் கல்லூரியில் முதுகலையும் பயின்றவர். முதல் முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், இரண்டாவது முறை சுயேச்சை யாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 7 மே 1952 அன்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆயிரம்விளக்குத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒன்பது ஆண்டுகள் சபாநாயகராகப் பதவி வகித்து யுபிஎஸ்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பதவிக் காலம் முடியும் முன்னர் நான்கு ஆண்டுகளிலேயே சபாநாயகர் பதவியிலிருந்து விலகினார்.
சிவஷண்முகம் சபாநாயகராகப் பதவி வகித்த காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. ஆகவே, சட்டமன்றத்தின் ஜனநாயக விழுமியங்களுக்கான வழிகாட்டியாக பிரிட்டன் நாடாளுமன்ற (House of Commons) நடவடிக்கைகளையே அவர் முன்னுதாரணமாகக் கொண்டார்.
இதனாலேயே சட்டமன்றத்தில் புதிய பிரச்சினைகள் விவாதத்துக்கு வரும்போது பிரிட்டன் நாடாளுமன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டார். இதற்காக பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலர்களுடன் தொடந்து கடிதத் தொடர்பில் இருந்தார் என்பது கவனத்துக்கு உரியது.