வரலாறு என்னும் விடுதலை | காலத்தின் தூரிகை 14

வரலாறு என்னும் விடுதலை | காலத்தின் தூரிகை 14
Updated on
3 min read

ஒரு நாள் ஐசையா பெர்லின் (Isaiah Berlin) தனது சக ஆக்ஸ்போர்டு பேராசிரியர்களைக் கூட்டி நிதானமான குரலில் அறிவித்தார். ‘தத்துவத் துறையிலிருந்து விலகி, வரலாற்றின்மீது ஆர்வம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்’ - இதைக் கேட்டதும் உடனிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதெப்படி சாத்தியம்? நீங்கள் கற்றது தத்துவம். கற்பிப்பது தத்துவம். ஏன் அதைக் கைவிட வேண்டும்? ஈர்ப்புக் குறைந்துவிட்டதா? ‘இல்லை. ஆனால் தத்துவத்தைக் காட்டிலும் வரலாறு என்னை அதிகம் ஈர்க்கிறது. குறிப்பாக, சிந்தனைகளின் வரலாறு. இனி அதில்தான் கவனம் செலுத்தப்போகிறேன்’ என்றார் பெர்லின்.

ஆனால் பெர்லினை விட்டு விலகத் தத்துவம் தயாராக இல்லை என்பதால், அவரோடு இறுதிவரை ஒட்டிக்கொண்டிருந்த தத்துவம் ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைத் திரட்டிக்கொண்டது. வரலாறுக்கு ஒரு புதிய தத்துவக் கண்ணோட்டம் அறிமுகமானது. மனித வரலாற்றில் - சிந்தனைகள் காலம்தோறும் மாறும், வளரும், உதிரும், வலுப்பெறும்.

வரலாறும் அப்படித்தான் இல்லையா? நம் காலத்தின் சிக்கல்களையும் போதாமைகளையும் புதிர்களையும் புரிந்துகொள்ள நாம் கடந்த கால நிகழ்வுகளை மட்டுமன்றி, கடந்தகாலச் சிந்தனைகளையும் சேர்த்தேதான் புரிந்துகொள்ள வேண்டும். புறக்கணிக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட, முக்கியமற்றவை என்று பலரால் கருதப்பட்ட கோட்பாடுகளையும் விவாதங்களையும் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, புதிய கண்களால் அவற்றை ஆராயத் தொடங்கினார் பெர்லின்.

வரலாற்றிலிருந்து யாரும் எதையும் பெற்றுக் கொள்வதில்லை என்கிறோம். ஆனால், நாம் பெற வேண்டியவை என்ன என்று யாராவது திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா? அறிவியல்போல் வரலாற்றிலிருந்து விதிகளை உருவாக்கிக்கொள்ள முடியுமா? போர் மூளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? குடிமக்கள் தங்கள் உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? அந்த உரிமைகளுக்குப் பங்கம் நேரும்போது அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? கடந்த காலத் தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியுமா? அதற்கான அறிவை வரலாறு நமக்கு அளிக்கிறதா?

இல்லை என்கிறார் பெர்லின்.

எந்த மோதலும், எந்த வேறுபாடும், எந்த முரணும் இல்லாத ஓர் உலகை நம்மால் புரட்சிகரமான முறையிலோ படிப்படியாகவோ அடைய முடியும் என்னும் நம்பிக்கை பலனற்றது. யதார்த்தத்துக்குப் பொருந்தாத கனவு அது. மார்க்சியம் உள்ளிட்ட சிந்தனைப் பள்ளிகள் இந்தக் கனவுலகுக்கான கோட்பாடுகளை வடிவமைத்து வழங்கியிருக்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in