

‘வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மிகப் பெரிய விஷயம், வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்’ - ஹெகலின் புகழ்பெற்ற வரி இது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகளவில், விரிவான தளங்களில் தாக்கம் செலுத்திய ஒரு சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்தான். அந்த மார்க்ஸ் மீது மிகப் பெரும் தாக்கம் செலுத்தியவர், மற்றொரு ஜெர்மானியரான ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரெட்ரிக் ஹெகல் (1770-1831).
வரலாறு மூன்று வகைப்படும் என்கிறார் ஹெகல். ஹிரோடோடோஸ் போன்றோர் எழுதிய நிகழ்வுகளின் தொகுப்பு முதல் வகை. இதில் வரலாற்றாசிரியர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, அதன் தாக்கத்துக்கு உட்பட்டவராக இருப்பார். இரண்டாவதில் வரலாற்றாளர் நிகழ்வுகளிலிருந்து விலகி வேறொரு காலத்தில் வாழ்ந்தாலும் ஆய்வுகளின்மூலம் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயல்வார்.
மூன்றாவது வகையான வரலாறு, தத்துவார்த்தமானது. ஹெகலுக்கு இதுவே முக்கியமானது. வரலாற்றுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு என்பது ஹெகலின் நம்பிக்கை. அந்தப் பொருளுக்கான தேடலே அவர் வாழ்வாகவும் பணியாகவும் இருந்தது. நெப்போலியன் ஒருமுறை குதிரையில் வலம் வரும்போது அவரைத் தொலைவிலிருந்து கண்டார் ஹெகல். நவீன உலகை வெல்லப் புறப்பட்ட மாபெரும் தலைவராக, உலகின் ஆன்மாவாக நெப்போலியன் அவருக்குத் தோற்றமளித்தார். இந்த ‘ஆன்மா’ என்னும் சொல் அவரோடு நிரந்தரமாகத் தங்கிப்போனதோடு, அவர் படைப்பின் மையமாகவும் மாறிப்போனது.
உலக வரலாறு என்பது என்ன? இந்தியா, சீனா, பாரசீகம் போன்ற பண்டைய நாகரிகங்களில் தொடங்கி கிரேக்கம், ரோம், ஐரோப்பா போன்ற வளர்ச்சிக் கட்டங்களை அடைந்து நிலப்பிரபுத்துவம், சீர்திருத்தம், அறிவொளிக் காலம் என்று மலர்ந்து... இறுதியாக பிரெஞ்சுப் புரட்சி என்னும் நவீனக் கட்டத்தை மனித குலம் வந்தடைந்திருக்கிறது.