

வரலாறு எழுதப்படும் முறையை மாற்றி அமைத்தவர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படும் பிராடல் தன் துறை குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா? ‘வரலாறு என்றொன்று கிடை
யாது!’ புதைந்திருக்கும் கடந்த காலத்தின்மீது ஒரு வரலாற்றாளர் வெளிச்சத்தைப் பாய்ச்சும்போது வரலாறு பிறக்கிறது. அதாவது, வரலாற்றாளர்தான் வரலாற்றை உருவாக்குகிறார்.
காலந்தோறும் வரலாற்றாளர்கள் தோன்றிக்கொண்டே இருப்பதால் வரலாறும் புதிது புதிதாகப் பிறந்துகொண்டே இருக்கிறது. எழுதுபவர் குறைபாடு கொண்டவராக இருந்தால், அவர் கட்டமைக்கும் வரலாற்றில் குறைகள் தென்படும்.
எழுதுபவர் நடுநிலை தவறும்போது அவருடைய பிரதி அதைக் காட்டிக்கொடுத்துவிடும். அதனால்தான் என்ன எழுதப்படுகிறது என்பது மட்டுமல்ல, எப்படி எழுதப்படுகிறது என்பதும் பிராடலுக்கு முக்கியம். முழுமையான வரலாறு தேவை என்றால் ஒரு வரலாற்றாளர் தனது எல்லைகளைக் கடந்து விரிந்துகொண்டே செல்ல வேண்டும். அவருடைய பார்வை விரியும்போது காட்சியும் விரியும்.
ஃபெர்னாண்ட் பிராடல் (Fernand Braudel, 1902-1985) பிரான்ஸில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சுற்றியுள்ள எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பது அவரது வழக்கம். அதுவே அவருடைய வரலாற்றின் தனித்தன்மையாகவும் பின்னர் மாறியது.
லத்தீனும் கொஞ்சம் கிரேக்கமும் பயின்று, பக்கம் பக்கமாகக் கவிதைகளை எழுதிக் குவித்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இறுதியில் வரலாற்றைத் தேர்ந்தெடுத்தார் பிராடல். எளிதாக இருந்தது, பிடித்திருந்தது என்பதைத் தாண்டிப் பெரிய பிணைப்பெல்லாம் அவருக்கு ஏற்பட்டுவிடவில்லை.
வரலாற்றைப் படித்து முடித்து, கண்மூடித் திறப்பதற்குள், தனது 21ஆவது வயதில் அல்ஜீரியாவில் (அப்போது பிரான்ஸின் காலனி) வரலாற்றைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு என்ன போதிக்கப்பட்டதோ அதை, எப்படிப் போதிக்கப்பட்டதோ அப்படி மட்டும் கற்றுக்கொடுத்தார்.
மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதுதான் ஒரு வரலாற்று ஆசிரியரின் பணி என்று பிராடல் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. அவர் உலகைக் காணத் தொடங்கியபோது இந்த நம்பிக்கை நொறுங்கிப்போனது.