

தொடர் மின்வெட்டு, மின்வாரியத் தலைமையகத்தில் வன்வட்டுத் (Hard Disk) திருட்டு எனக் கடந்த இரண்டு மாதங்களாக பல சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல்-மே-ஜூன் மாத மின்கட்டணத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 40 முதல் 60 சதவீதம் மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகத் தற்போது புகார் எழுந்துள்ளது.
200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்ட பிறகு, மறைமுகமாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டதா என்றும் பலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதன் பின்னணி என்ன?
கணக்கீடும் கட்டணமும்
பெரும்பான்மையான மாநிலங்களில் மாதாந்திர மின் கணக்கீட்டு முறை அமலில் உள்ளது. பிற மாநிலங்களில் வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் 0-50, 51-100, 101-200 201-250 யூனிட் அடுக்கு முறைகளைக் (Slab System) கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
மாநிலத்துக்கு மாநிலம் இது மாறுபடும். தமிழ்நாட்டில் உயருகின்ற மின்இணைப்புகளுக்குத் தகுந்தாற்போல் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 01.10.1987 முதல் இரண்டு மாதங்களுக்கு (60 நாள்களுக்கு) ஒரு முறை மின்கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.
வீடுகளுக்கான மின்கட்டண அடுக்குமுறை பல்வேறு காலக்கட்டங்களில் மாற்றப்பட்டு, 2022 முதல் தற்போதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 09.05.2026 வரை உள்ள மின்கட்டண வீதப் பட்டியலில் 100 யூனிட் இலவச மின்சாரம், 10.05.2026 முதல் மின்கட்டண வீதப் பட்டியலில் 200 யூனிட் இலவச மின்சாரம் என்கிற அடிப்படையில் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
உண்மை நிலை
அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாகச் சில தவறான புரிதல்கள் நிலவுகின்றன. மக்கள் தங்களின் மொத்தப் பயன்பாட்டில் 200 யூனிட் மின்சாரத்தைக் கழித்தது போக, மீதம் உள்ள யூனிட்டுகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.