புனைப்பெயரை மாற்றச்சொன்ன கோபாலி! | அஞ்சலி
எழுபதுகளில் நான் ‘கோபாலி’ என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். தஞ்சை இலக்கிய நண்பர்கள் என்னை ‘கோபாலி’ என்றுதான் குறிப்பிடுவார்கள்.
எண்பதுகளின் தொடக்கத்தில் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது ஒருநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் ஒரு விசித்திரமான வேண்டுகோளை முன்வைத்தார்.
“சார், உங்கள் பெயர் கோபாலிதானே?”
“ஆமாம்.”
“உங்கள் புனைப்பெயரை மாற்றிக்கொள்ள முடியுமா?”
“ஏன்?”
“சார் என் பெயர் எஸ்.கோபாலி. ஒரு கலை விமர்சகராக ஆங்கில ஏடுகளில் என்னை அறிந்திருக்கலாம்.”
“உங்களைத் தெரியும் சார்... சொல்லுங்கள்.”
“நடிப்பு, திரைத்துறை, விமர்சனம் இவைதான் நான் செயல்படும் தளங்கள்.
கதைகள் எழுதுவது கிடையாது. நீங்கள் ‘கோபாலி’ என்ற பெயரில் எழுதிய கதைகளைப் படித்துவிட்டு அடடே! நீ கதை எல்லாம் எழுதுவாயா?
சொல்லவே இல்லையே! என்று நண்பர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பேசாமல் நீங்கள் எனக்காக உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள முடியுமா?”
“எனக்குப் பிடித்ததால்தான் ‘கோபாலி’ என்ற பெயரில் எழுதுகிறேன். தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலில் கோபாலி என்று ஒரு கதாபாத்திரம்... எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அதையே என் புனைப்பெயராக வைத்துக் கொண்டுவிட்டேன்.”
“இப்போது குழப்பம் வந்துவிட்டதே! ப்ளீஸ்.. வேறுபெயரை வைத்துக்கொள்ளுங்கள்!”
“யோசிக்கணும்.”
“யோசிக்காதீங்க கோபாலி”
“பாத்தீங்களா? நீங்களே கோபாலின்னு சொல்றீங்க.’’
“சாரி.. சாரி! நான் வேணும்னா உங்களுக்கு நல்ல புனைப்பெயரா பார்த்து சொல்லட்டுமா?”
“குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிற மாதிரி அல்லவா இருக்கிறது! என் ஜாதகத்தைக்கூட கேட்பீர்கள்போல இருக்கிறதே!”
“நிஜமாத்தான் சொல்லுகிறேன். கொஞ்சகாலம் ‘கோபாலி’ என்ற பெயரில் எழுதாதீர்கள்.. அப்புறம் எழுதலாம்!”
“ஏன் அப்படி?”
“எனக்குப் பிறகு நீங்கள்
‘கோபாலி’ என்ற புனைப்பெயரில் எழுதலாமே!”
“சார் வாட்யூ மீன்?”
“எஸ்... நீங்கள் இளைஞர்... சாதிக்க வயது இருக்கிறது... நான் அப்படி அல்ல!”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர் சொன்னவிதம் மனதைத் தொட்டது.
“சார் இப்படி எல்லாம் பேசாதீர்கள்! நான் இனிமேல் கோபாலி என்ற பெயரில் எழுதமாட்டேன்!”
“ரொம்ப தேங்க்ஸ்.”
இந்த உரையாடலுக்குப் பின்னர் அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு தொலைபேசியில் பேசும்போதெல்லாம் “ஹலோ கோபாலி!” என்பார். சின்னதாக சிரிப்பு.
அவர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிவதும், இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் ரஜினிகாந்தை அவர்தான் அறிமுகப்படுத்தினார் என்பதும்,
பல திரைப்பட முன்னணி கதாநாயகர்கள், அவரை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுவதும் பின்னர் தெரியவந்தது.
அதற்குப் பிறகு ‘கோபாலி’ என்ற பெயரையே நான் மறந்துவிட்டேன்.எனக்கு ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ என்ற பெயரை தஞ்சை ப்ரகாஷ்தான் சூட்டி இலக்கிய ஞானஸ்நானம் செய்துவைத்தார். ஆனால், நண்பர்கள் கோபாலி என்ற பெயரில் கூப்பிடுவதை என்னால் தடுக்கமுடியவில்லை. நான் கோபாலி என்ற பெயரில் எழுதுவதை விட்டுவிட்டேன்.
இப்போது எஸ்.கோபாலி மறைந்துவிட்டார். கோபாலி என்ற பெயரில் நான் எழுதுவதை அவர் ஆட்சேபிக்கப்போவதில்லை. ஆனாலும், ‘கோபாலி’ என்ற பெயரில் இனி ஒருபோதும் எழுத மாட்டேன். இருந்தாலும் மறைந்தாலும், கலை உலகில் ஒரே கோபாலிதான் உண்டு.
அது நீங்கள் மட்டும்தான்!
கோபாலி சார்! போய் வாருங்கள்!
