

ஐந்தொகை என்னும் சொல்லின் பயன்பாடு இப்போது அருகிவிட்டது. ‘பாலன்ஸ் ஷீட்’ என்று ‘தமிழில்’ சொன்னால் பலருக்கும் புரியக்கூடும். இது ஓர் அட்டவணை, நிதியாண்டின் முடிவில் தயாரிக்கப்படும். வலது பக்கம் நிறுவனத்தின் சொத்துக்களும்; இடது பக்கம் லாபமும், கொடுக்க வேண்டிய கடன்களும் பட்டியலிடப்படும்.
இது அந்த நிறுவனத்தின் நிதிநிலையை மதிப்பிட உதவும். 2025இல் உலக அரசியலின் போக்கு எப்படியிருந்தது என்பதற்கு நாமும் ஓர் ஐந்தொகை எழுதலாம். அதில் எண்களுக்குப் பதில் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இருக்கும். போர்களும் போட்டிகளும் இருக்கும். இதைக் கொண்டு உலக அரசியலின் போக்கைக் கணிக்க முடியுமா பார்ப்போம்.
கலைத்துப்போடும் டிரம்ப்: இந்த ஆண்டு, பன்னாட்டு அரசியல் களம் டிரம்ப்பால் அதகளப்பட்டது. இதுகாறும் அமெரிக்கா அனுசரித்துவந்த ராஜீய நெறிகள் எதுவும் அவருக்கு உவப்பாக இல்லை. பன்னாட்டு ஒத்துழைப்புக்கு அவர் எதிராக இருக்கிறார். உலகச் சுகாதார அமைப்பு, ஐநாவின் மனித உரிமை மன்றம் (UNHRC), யுனெஸ்கோ, பாரிஸ் காலநிலை உடன்படிக்கை முதலான அமைப்புகளிலிருந்து விலகினார். இவற்றுக்கு அமெரிக்கா வழங்கிவந்த பெருந்தொகையிலான நல்கைகளை நிறுத்தினார். உலகமயம், கட்டற்ற வணிகம் ஆகியவற்றுக்கும் அவர் எதிராக இருக்கிறார். எல்லா நாடுகளின் மீதும் இறக்குமதித் தீர்வை விதித்தார்.
எட்டு மாதங்களில் எட்டுப் போர்களை நிறுத்தினேன் என்று டிரம்ப் சொல்லிக்கொண்டார். ஆனால், அடிப்படையில் அவர் போருக்கு ஆதரவானவர். இஸ்ரேல் போருக்கு உறுதுணையாக இருந்தார்; ஐநாவில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானங்களை முறியடித்தார். ஈரான் மீது குண்டு வீசினார். சிரியாவைத் தாக்கினார். இப்போது வெனிசுலாவைக் குறி வைக்கிறார்.
சீனாவின் ஆதிக்கம்: அமெரிக்காவுக்கு எதிராக இன்னொரு துருவமாக சீனா வளர்கிறதா என்கிற கேள்வி, இந்த ஆண்டு மேலெழுந்தது. சீனா உலகின் தொழிற்சாலையாகத் தொடர்கிறது. எனில், இந்த ஆண்டு சீன வணிகம் எட்டிய மைல்கல் முன்னுதாரணம் இல்லாதது. உலக அளவில் அதன் ஏற்றுமதியின் மதிப்பு, இறக்குமதியைக் காட்டிலும் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.90 லட்சம் கோடி) அதிகமாக இருந்தது.