

இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்தில் ஓர் ஆபத்தான மாற்றம் நிகழ்கிறது. ஒழுங்கீனம் சிலரால் ‘துணிச்சல்’ என்று போற்றப்படுகிறது. அடாவடி ‘ஆளுமை’ என்று பாராட்டப்படுகிறது. அகங்காரம் ‘தன்னம்பிக்கை’ என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பிறரின் உரிமையை மதிக்காத மனநிலை ‘சுதந்திரம்’ என்கிற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது. இது சமூகச் சீரழிவின் தொடக்கப் புள்ளி.
மறைந்துவரும் விழுமியங்கள்
ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பம் குழந்தையின் முதல் பல்கலைக்கழகமாக இருந்தது. இன்று தனிக்குடும்ப வாழ்க்கை பெருகியுள்ள நிலையில், குடும்ப உரையாடல்களைக் கைப்பேசித் திரைகள் மாற்றியுள்ளன. குழந்தையின் ஆசிரியராகக் கைப்பேசியும், நண்பனாக சமூக ஊடகங்களும் மாறியுள்ளன.
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான பயிற்சி மட்டுமல்ல; வாழ்வதற்கான பண்பாட்டுப் பயிற்சியும்கூட. கெடுவாய்ப்பாக, இன்று பல கல்வி நிறுவனங்களில் மதிப்பெண்கள் உயர்ந்துள்ளன; ஆனால் மதிப்புகள் குறைந்துள்ளன. ஒழுக்கத்தைவிட போட்டி; மனிதநேயத்தைவிட சாதனை; பொறுப்பைவிட வெற்றி ஆகியவற்றுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் மனரீதியான துன்புறுத்தல்கள், குழுவாக ஒதுக்குதல், இணையவழி இழிவுபடுத்துதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில கல்வி நிறுவனங்கள் தங்களது பெயருக்குக் களங்கம் ஏற்படக் கூடாது என்கிற அச்சத்தாலும், செல்வாக்கு மிக்க பெற்றோரின் அழுத்தத்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றன.
சிதையும் ஒழுக்கம்
குழந்தை வளர்ப்பிலும் மாற்றம் தேவைப்படுகிறது. குழந்தையின் பிடிவாதத்தைச் சமாளிக்கக் கைப்பேசியைக் கையில் கொடுத்து அமைதிப்படுத்துவது, பெற்றோருக்குத் தற்காலிக நிம்மதியை அளிக்கலாம். ஆனால் அது சமூகத் தொடர்பையும், பொறுமையையும், கவனத் திறனையும், மனித உறவுகளையும் மெதுவாகச் சிதைக்கிறது.
ஒழுக்கச் சிதைவின் முதல் படி பல நேரங்களில் குடும்பத்திலேயே தொடங்குகிறது. உலக நாடுகளின் அனுபவம் இதற்குச் சிறந்த பாடமாக உள்ளது. உலகின் முன்னணிப் பொருளாதார சக்திகளில் ஒன்றான ஜப்பானின் பெருமை தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல; ஒழுக்கத்தில் உள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் தாங்களே வகுப்பறைகளைச் சுத்தம் செய்கின்றனர். பொதுச் சொத்துகளைத் தங்களுடைய சொத்தாக மதிக்கக் கற்றுக்கொள்கின்றனர்.