

கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கடந்த மே 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான காலக்கட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கி நிலுவை வைத்துள்ள விவசாயிகளின் உத்தேசக் கடன் தொகையான ரூ.5,932.23 கோடியைத் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு, ஏனைய பெரு விவசாயிகளுக்கு 100% கடன் தொகையும், ரூ.75,000க்கு மேல் அதிகமாகக் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையும் தள்ளுபடி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சமாக ரூ.35,000, அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும் பயன் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும், இதன் வழியே 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடியும், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.14 கோடியும் உத்தேசமாகத் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
எனினும், கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுவதையும் அரசு தள்ளுபடி செய்யுமா என்னும் எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
முழுத் தள்ளுபடி சாத்தியமா?
மகாராஷ்டிர அரசு அண்மையில் 56 லட்சம் விவசாயிகளின் வேளாண் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் ரூ.36,600 கோடி அளவுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு விவசாயிக்கு ரூ.2 லட்சம் வரை வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் வைத்திருக்கும் விவசாயிகள், தங்களின் கடனைத் திருப்பிச் செலுத்திய பின்னரே, மீதமிருக்கும் ரூ.2 லட்சம் கடனை அரசு செலுத்துவதுடன், கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.