

தேர்ந்த மொழியியலாளர், சொல்லகராதி உருவாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருபவர், பிரெஞ்சு இலக்கணத்தை முதன்முதலில் தமிழில் எழுதியவர், மொழிபெயர்ப்பாளர், பிரான்ஸில் ஐந்து முறை ஐரோப்பியத் தமிழ் மாநாட்டை நடத்தியவர், பேராசிரியர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர் முனைவர் ச.சச்சிதானந்தம்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பிறந்த இவர், 1980இல் பிரான்ஸில் குடியேறினார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 1,875 பாடல்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
திருக்குறளை பிரெஞ்சில் ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். எழுத்தாளர் சிவசங்கரியின் ‘சூரியவம்சம்’ நூலை பிரெஞ்சில் மொழிபெயர்த்து, அதன் வெளியீட்டுக்காகச் சென்னை வந்திருந்தவருடன் ஒரு சந்திப்பு.
மொழிகள் மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
பிரான்ஸில் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குக் கட்டணமில்லை என்றாலும், எனக்கு நிதிநல்கை கிடைக்கவில்லை. அதனால், மொழிகளைக் கற்கத் தொடங்கினேன். ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளை அறிந்திருந்த நிலையில் ஜெர்மன், சிங்களம், இந்தி, தெலுங்கு, சம்ஸ்கிருதம், எஸ்பரான்டோ (ஆங்கிலத்துக்கு இணையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி) ஆகிய மொழிகளையும் கற்றேன்.
1983இல் பாரிஸ் தேவாலயத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து ‘தமிழ்ப் பள்ளிக்கூடம்’ தொடங்கினேன். தமிழர்களுக்கு பிரெஞ்சையும் பிரெஞ்சு மக்களுக்குத் தமிழையும் கற்றுக்கொடுத்தேன்.
தொடக்கத்தில் ஆறு பேர்தான் சேர்ந்தனர். பிறகு ஆறு நூறானது. மாணவர் எண்ணிக்கை அதிகரித்தபோது, எங்கள் பள்ளியைப் பன்னாட்டு உயர்கல்வி நிறுவனமாகத் தரம் உயர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தற்போது, ‘பன்னாட்டு உயர்கல்வி - தமிழியல் நிறுவன’மாக அது செயல்பட்டுவருகிறது.