புதுமையைக் கைக்கொள்கிறது தமிழ்ச் சிறார் இலக்கியம்! | மலையாள எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பி.வி.சுகுமாரன்

கருத்துப் பேழை சந்திப்பு
புதுமையைக் கைக்கொள்கிறது தமிழ்ச் சிறார் இலக்கியம்! | மலையாள எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பி.வி.சுகுமாரன்
Updated on: 
3 min read

நவீனத் தமிழ் இலக்கியம் மலையாள மொழி பெயர்ப்புகள் வழியாகப் பெற்றது ஏராளம். அதேநேரம், தமிழில் இருந்து மலையாளத்துக்குச் சென்றது ஒப்பீட்டளவில் குறைவு.

இந்தப் பின்னணியில் நவீனத் தமிழ் இலக்கியத்தையும் குறிப்பாகத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தையும் மலையாளத்துக்குக் கொண்டுசெல்லும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்துவருகிறார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பி.வி.சுகுமாரன்.

யூமா வாசுகி எழுதி 2024இல் பால சாகித்ய விருது பெற்ற ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்ததற்காக 2026 நல்லி - `திசை எட்டும்' மொழியாக்க இலக்கிய விருதைப் பெறுவதற்காக சென்னை வந்திருந்தவரிடம் கலந்துரையாடியதில் இருந்து...

Q

உங்கள் வாசிப்பு, எழுத்துப் பின்னணி குறித்து...

A

பாலக்காடு மாவட்டம் பருத்திப்புள்ளிதான் என் ஊர். வாசிப்புப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை. பள்ளிக் காலத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த ‘சோவியத் லேண்ட்’, ‘மிஷா’ உள்ளிட்ட இதழ்களையும் உள்ளூர் நூலகத்தில் இருந்த நூல்களையும் வாசித்தேன்.

அவற்றின் வழியாக வாசிப்பின் மீது எனக்குப் பிடிப்பு ஏற்பட்டது. மத்திய பொதுத் துறை நிறுவனமான இன்ஸ்ட்ருமென்டேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதேநேரம், வாழ்க்கையில் எனக்குப் பெரிதும் பிடித்த ஒன்றாக, முக்கியமான ஒன்றாக வாசிப்பு உருவெடுத்தது.

பணியின் தொடக்கக் காலத்தில் வேலை பார்த்த நிறுவனத்தின் நிறுவன நாள் கொண்டாட்டத்தை ஒட்டிக் கதை எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் பரிசு கிடைத்த உற்சாகத்தில் தொடர்ந்து சிறுகதைகளை எழுதினேன். 2002இல் என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கலாராத்திரியில் ஒரு கஸல்’ வெளியானது.

பொதுவாக, தமிழ் இலக்கிய உலகுடன் ஒப்பிடப்பட்டு கேரளம் பாராட்டப்படுகிறது. உண்மையில் அங்கும் பிரபலமான எழுத்தாளர்களுக்கே பதிப்பகங்கள் கவனம் கொடுக்கின்றன.

எல்லா எழுத்தாளர்களும் ஒன்றுபோல் கருதப்படுவதில்லை. நூல் தேர்வு, நூல்களைப் பரவலாக எடுத்துச்செல்லுதல், உரிமத்தொகை வழங்குதல் போன்ற அம்சங்களில் அங்கும் பாரபட்சம் நிலவவே செய்கிறது.

Q

அதேநேரம், உங்களுடைய சிறார் படைப்புகள் கேரளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் கவனிக்கப்பட்டிருக்கின்றன, இல்லையா?

A

நான் எழுதிய ‘தியா’ என்கிற சிறார் நாவல் பரவலான வரவேற்பைப் பெற்றது. ஒரே மாதிரியாகக் கட்டமைக்கப்பட்ட, கடுமையான போட்டி நிறைந்த படிப்பு-வேலைகளை நோக்கித்தான் பெரும்பாலானோர் ஓடுகிறோம்.

மாறாக, நம்முடைய உள் மன ஆற்றலை உணர வேண்டியதன் அவசியம் குறித்த கதை அது. அதைப் படித்துவிட்டு, சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பல பள்ளிகளில் இருந்து அழைப்பு வந்தது. பதின்பருவச் சிறார் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை ‘மீளும் நிறங்கள்’, ‘விடுபடும் சுடர்’ உள்ளிட்ட என்னுடைய நாவல்கள் பேசுகின்றன.

பிரபலம் அடைந்தால் வாசகர்கள் நம் நூல்களைத் தேடிவருவார்கள் என்பதைவிட, நம் படைப்பை ஒரு வாசகர் சரியாகக் கண்டடைந்துவிட்டால் போதும். அவர்கள் நம்மைப் பின்தொடர்வார்கள் என்பதே இதன் மூலம் நான் பெற்ற வெளிச்சம். மேற்கண்ட மூன்று நூல்களும் தமிழில் வெளியாக முழு முதற்காரணம் எழுத்தாளர் யூமா வாசுகிதான்.

Loading content, please wait...

X