

குடிமைப் பணி அதிகாரிகள் சமூகத்துக்கு எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உதவ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் எம்.ஜி.ராஜமாணிக்கம். கேரளத்தில் ‘எம்ஜிஆர்’ என்கிற பெயரில் புகழ்பெற்றிருக்கும் தமிழரான ராஜமாணிக்கம் ஐஏஎஸ், எளிய பின்னணியில் இருந்து உயர்ந்தவர்.
இவரது மனைவி ஆர்.நிஷாந்தினி ஐபிஎஸ்ஸும் கேரளத்தில் பணியாற்றுகிறார். தனது பதவி மூலம் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வகையிலும் மக்கள் பணிகளை மேற்கொண்டுவரும் ராஜமாணிக்கத்துடன் உரையாடியதிலிருந்து...
ஐஏஎஸ் என்கிற உயரிய இடத்தை அடைய இளம் வயதில் உங்களுக்கு உந்துதலாக இருந்தது எது?
எனக்குச் சொந்த ஊர் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர். ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் இளம் வயதிலிருந்தே எனது லட்சியம். என் உறவினர் ஒருவர் காவல் துறையில் சேர்ந்தார். அவரது வீட்டுக்குச் செல்லும்போது அவரது சீருடை, காலணியை அணிந்து பார்த்துப் பெருமைப்படுவேன்.
ஒரு கனவை விதைத்தால் அது நிச்சயம் அறுவடையாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுத்தராக இருந்த எனது தந்தை, என் கனவுகளுக்குத் துணைநின்றார். அறிவொளி இயக்கத்தின் வீதி நாடகங்களில் பங்கேற்றிருந்தபோது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊருக்குச் செல்லத் தாமதமாகிவிட்டது.
இரவு 7 மணிக்குச் சென்றபோது, ஊரே உறங்கிவிட்டது. காரணம், அம்மக்கள் காலை 3 மணிக்கெல்லாம் கிளம்பிச் சென்று தீப்பெட்டி, பட்டாசு கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள்.
அதிகாலையில் ஒரு பட்டாசுக் கம்பெனியின் பேருந்திலேயே கிளம்பினோம். பேருந்தில் மூன்று சிறுமிகள் -கறுத்துப்போன கைகளுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்து நிலைகுலைந்துபோனேன். ஐஏஎஸ் அதிகாரியானால் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்கிற எண்ணம் அப்போதுதான் வந்தது.
அதை நோக்கிய பயணம் எப்படி அமைந்தது?
தனியார் பொறியியல் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் (மெக்கானிக்கல்) பயின்ற பின்னர், வேலை தேடி நண்பர்களுடன் சென்னைக்குச் சென்றேன். வேலை கிடைக்காமல், கேட் நுழைவுத்தேர்வு எழுதி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கத் தேர்வானேன். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கோவையில் இயங்கிவரும் கல்லூரியில் சேர்ந்தேன்.
வேளாண் பல்கலைக்கழகமும் அதே வளாகத்தில்தான் இருந்தது. அங்கு இருந்த பலரும் குடிமைப் பணித் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஐஏஎஸ் கனவு மீண்டும் துளிர்விட்டது. ஒருகட்டத்தில் டெல்லி சென்றேன்.
ஒரு பயிற்சி நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து, ‘எனக்கு நீங்கள் பயிற்சி அளித்தால், உங்கள் நிறுவனத்துக்குப் பெருமை தேடித் தருவேன்’ என மின்னஞ்சல் அனுப்பினேன். வியந்துபோன அவர்கள் வாய்ப்பு தந்தனர். அப்படித்தான் என் ஐஏஎஸ் கனவுக்கான பயணம் தொடங்கியது. தேர்வானதும் கேரளத்தில் பணி கிடைத்தது.