

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியாவில் தோன்றிய முதல் எழுச்சி வேலூர்ப் புரட்சி.
இது குறித்துப் பல நூல்கள் வெளியாகியிருப்பினும், சில முதன்மைச் சான்றுகளை வெளிக்கொணர்ந்ததிலும் புரட்சிக்கு வழிவகுத்த சூழலை முழுமையாகப் பதிவுசெய்ததிலும் வரலாற்றாய்வாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் பேராசிரியருமான கா.அ.மணிக்குமாரின் ஆய்வு ஓர் அரிதான முயற்சி.
திருநெல்வேலியில் வசிக்கும் மணிக்குமாரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
வேலூர்ப் புரட்சி குறித்த உங்களது ஆய்வு எப்படித் தொடங்கியது?
வேலூர்ப் புரட்சியின் 200ஆம் ஆண்டான 2006இல் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு நூலை வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் முன்வந்தார்.
அதை எழுதும் வாய்ப்பு, வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மூலம் எனக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டு ஆவணக் காப்பகத்தில் கிடைத்த சான்றுகளைச் சார்ந்து ‘வேலூர்ப் புரட்சி-1806’ என்கிற தலைப்பில் 2007இல் நூல் எழுதினேன்.
அதை வரவேற்கும்வகையில் ‘ஃபிரண்ட்லைன்’ இதழில் ஒரு மதிப்புரை வெளியானது. இந்திய வரலாற்று ஆய்வு மன்ற (ஐசிஎச்ஆர்) தலைவர் சப்யசாச்சி பட்டாச்சார்ய அதைப் படித்துவிட்டு, விரிவான ஆய்வுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று சான்றுகளைத் திரட்டுவதற்கான ஐசிஎச்ஆரின் நிதிக்கொடை எனக்குக் கிடைக்க வழிகாட்டினார்.
அதன் மூலம் 2009இல் லண்டன் பிரிட்டிஷ் நூலகத்துக்கும், ஸ்காட்லாந்து தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் செல்ல முடிந்தது. புரட்சி குறித்து சமகாலத்து ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளின் கடிதங்கள், கருத்துகள் பதிவுசெய்யப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள் நூலை (வேலூர்ப் புரட்சி-1806, Foreshadowing the Great Rebellion: The Vellore Revolt,1806 ஆகிய நூல்கள்) விரிவாக எழுத உதவின.