கடல் மட்ட உயர்வு இலங்கைக்கும் ஆபத்தே! - சுற்றுச்சூழல் எழுத்தாளர் பொ.ஐங்கரநேசன்

கருத்துப் பேழை சந்திப்பு
கடல் மட்ட உயர்வு இலங்கைக்கும் ஆபத்தே! - சுற்றுச்சூழல் எழுத்தாளர் பொ.ஐங்கரநேசன்
Updated on
3 min read

பொ.ஐங்கரநேசன், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர், செயல்பாட்டாளர். அவர் எழுதிய ‘ஏழாவது ஊழி’ (சாளரம் வெளியீடு) நூல், தமிழ்ப் பசுமை இலக்கியத்தின் முன்னோடி நூல்களுள் ஒன்று. படிப்பு, வேலை நிமித்தம் இந்தியாவில் சில காலம் வாழ்ந்த அவர், 2009 இறுதிப் போருக்குப் பின்னர் இலங்கையில் வாழ்ந்துவருகிறார்.

வடக்கு மாகாண சபை விவசாய-சுற்றுச்சூழல்-நீர்ப்பாசனத் துறை அமைச்சராக 2013-17 வரை பணியாற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ‘தமிழ்த் தேசியப் பசுமை இயக்க’த் தலைவராகச் செயல்பட்டுவருகிறார். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த இலங்கை தமிழ் அரசியல் கட்சியினர் குழுவில் இடம்பெற்றிருந்த அவருடனான நேர்காணல்:

Q

இயற்கை, சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது தொடங்கியது?

A

யாழ்ப்பாணத்தில் என்னுடைய மேல்நிலைப் பள்ளிக் காலத்தில் உயிரியல் ஆசிரியராக இருந்த கா.சி. குகதாசன் வகுப்பறைக்கு வெளியே நிறையப் பயிற்சிகளை வழங்கினார். யாழ்ப்பாணத்தின் மணல்காடு, நாகர்கோவில் பகுதிகளில் தொண்டைமான் ஆறு என்னும் ஏரி, கடல் அருகே உப்புநீர் ஏரியில் கலக்கும் பகுதியில் அலையாத்திக் காடுகள் உள்ளன. அங்கு உயிர்ப்பன்மை சார்ந்த பல்வேறு விஷயங்களை நேரில் காட்டி அவர் விளக்கிக் கூறுவார்.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1982-85 வரை இளங்கலைத் தாவரவியல் படித்தேன். அந்தக் கல்லூரியே சிறு காடு போலத்தான் இருக்கும். அங்கு ‘ஒரு நாளுக்கு ஒரு தாவரம்’ என்கிற வகையில் அடையாளம் காட்டப்பட்டு, அதன் முக்கியத்துவம் விளக்கப்படும். இப்படி இயற்கை மீதான நேசம் எனக்குள் படிப்படியாக அதிகரித்தது.

தொடர்ச்சியான போர் காரணமாக இயல்பாகவே இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசடைதல் குறித்த விழிப்புணர்வு வடக்கு இலங்கையில் இருந்தது. என்னுடைய படிப்புகளின் பின்னணியில் இயற்கை, சுற்றுச்சூழல் குறித்து உணர்வுரீதியிலான அக்கறைக்கு மாறாக, அறிவியல்ரீதியில் அவற்றைப் புரிந்துகொள்ள உந்தப்பட்டேன்.

Q

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் எழுதத் தொடங்கிவிட்டீர்களா?

A

மீண்டும் 1996இல் கிறித்துவக் கல்லூரியில் இதழியல்- மக்கள் தொடர்பியல் முதுநிலைப் பட்டயப் படிப்பைப் படித்தேன். தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி, சில இணையத்தளங்கள், ஊடகவியல் பேராசிரியர் சுரேஷ்பால் ஆசிரியராக இருந்த ‘அரும்பு’ இதழ் உள்ளிட்டவற்றில் எழுதத் தொடங்கினேன். எழுத்துப் பயிற்சிக் களமாக இது எனக்கு அமைந்தது.

போர் காரணமாகத் தாய் நிலத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்ததால் பல்வேறு மனச் சிக்கல்களுடன்தான் வாழ்ந்துவந்தோம். அந்த நேரத்தில் எழுதுவது மனதுக்கு இதம் தருவதாக அமைந்தது.

அதேநேரம், எங்கள் மக்களின் போராட்டம் எதற்காக என்கிற எங்கள் தரப்பை, எங்களுக்கான நியாயத்தை எழுத்து வழியில் மக்களுக்குப் பரவலாக எடுத்துச்செல்ல முடியும் எனத் தோன்றியது. அந்த வகையில் கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகளைப் பேட்டி கண்டு இலங்கையில் வெளிவந்த ‘தினக்குரல்’ இதழில் மிக விரிவாக எழுதிவந்தேன். எனக்கான முகவரியாக எழுத்தே அமைந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in