

தி. அமலோர்
கல்வி உளவியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்துவருபவர், புதுச்சேரியைச் சேர்ந்த தி.அமலோர். புதுச்சேரி அரசுப் பள்ளிக் கல்வி இயக்கத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பிற ஆசிரியர்களுக்கான பயிற்சியாளர், உளவியல் விரிவுரையாளர் ஆகிய பணிகளில் 38 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
ஆசிரியப் பட்டயக் கல்விக்கான ‘கற்கும் குழந்தை’ பாட நூல், ஐந்தாம் வகுப்பு - பதினோராம் வகுப்புகளுக்கான தமிழ்ப் பாட நூல் ஆகியவற்றுக்கான ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். அவரிடம் பேசியதன் சுருக்கம்:
கல்வி உளவியல் துறைக்கு எப்படி வந்தீர்கள்?
1970களில் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.T.Ed) படிக்க வேண்டும்; அரசுப் பள்ளிகளில் 1-8ஆம் வகுப்பு வரைக்கும் பாடம் எடுத்தாக வேண்டும்.
நான் படித்தபோது, அதில் ஒரு பாடமான கல்வி உளவியலில் ஏற்பட்ட ஈடுபாடுதான் பின்னாள்களில் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வைத்தது. கணிதம் பயில வாய்ப்புக் கிடைக்காதது இன்னொரு காரணம்.
தமிழ் வளர்த்த ஞானியார் சுவாமிகளின் நேரடி மாணவரான சுந்தர சண்முகனாரின் மாணவர் நீங்கள். அயல்நாட்டுச் சிந்தனை மரபில் தோன்றிய உளவியல் படிப்பைத் தமிழ்ச் சிந்தனை மரபு அணுகும் விதம் பற்றிச் சொல்லுங்கள்...
ஜெர்மனியில் வாழ்ந்த யூத அறிஞர்களின் பங்களிப்புதான் நவீன உளவியலுக்கு அடித்தளம் அமைத்தது. ஹிட்லர் ஆட்சியில் அவர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர நேர்ந்தது; அமெரிக்கா, பிரிட்டன் அறிஞர்களின் பங்களிப்பும் உளவியலை உருவாக்கியது.
தமிழ் இலக்கியத்தில் உளவியல் சார்ந்த பல பதிவுகள் உள்ளன. நம்மவர்கள் கூறிய பல செய்திகளை அயல்நாட்டவர்கள் அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். ராபர்ட் புளுட்சிக் என்கிற அறிஞர் 500 மன எழுச்சிகளை எட்டாக வகைப்படுத்துகிறார்.
நகை, அழுகை, இளிவரல் (அருவருப்பு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண் சுவைகளாகத் தொல்காப்பியம் வகைப்படுத்துவதை இதனோடு ஒப்பிடலாம். ஒருவர் தன்னைப் புரிந்துகொள்வதும் பிறரைப் புரிந்துகொள்வதும் உளவியலின் முக்கியச் செய்தி. ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ எனத் திருமூலர் கூறுவதும் இதைத்தான்.