

சி மகேஸ்வரன்
பழங்குடியினச் சமூகத்தின் பெருமிதம் நிறைந்த பண்பாட்டுக் கூறுகளையும் அவர்களது இன்றைய வாழ்க்கை நிலையையும் ஒருசேரப் பொதுச் சமூகத்தின் முன்வைக்கிற பணியைச் செய்துவருபவர் முனைவர் சி.மகேஸ்வரன்.
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்தியச் சமூக அறிவியல் ஆய்வுக் குழுவின் முதுநிலை ஆய்வுத் தலைவராகப் பணிபுரியும் மகேஸ்வரனுடன் உரையாடியதில் இருந்து...
உங்களது தொடக்கக் காலப் பணிகள் பற்றிச் சொல்லுங்கள்...
மொழியியல் / மானிடவியல் ஆய்வாளராகத் தொடங்கி அருங்காட்சியகக் காப்பாட்சியர் (curator) என்னும் நிலையை அடைந்தேன். பின்னர், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் ஆய்வு நடுவத்தின் இயக்குநராகப் பணியாற்றும் அரிய வாய்ப்பு, என்னுடைய பணி நிறைவுக் காலத்தில் கிடைத்தது. பழங்குடி சமூகத்துக்குச் சென்று சேர வேண்டிய சமூகநீதியை மீட்டுத் தருதல், நிலை நாட்டுதல் போன்றவற்றை இப்பணியில் செய்ய முடிந்தது.
அருங்காட்சியகக் காப்பாட்சியர் பணியின் முக்கியத்துவம் எத்தகையது?
ஒரு வட்டாரம் தொடர்பான வரலாற்று, பண்பாட்டுத் தரவுகளை உரிய காட்சிப்பொருள்கள் வாயிலாக முறையாகக் காட்சிப்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் பணி அருங்காட்சியகக் காப்பாட்சியருடையது.
கோவை மாவட்டத்தில் பணியாற்றியபோது, ஆனைமலைப் பகுதியில் உணர்கொம்பு வடிவக் கைப்பிடி கொண்ட செம்பிலான பத்து வாள்கள் கிடைத்தன.
சிந்துவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்த அவற்றை இனங்கண்டு அருங்காட்சியகத் திரட்டுடன் இணைத்துக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நீலகிரி மாவட்டத்தில் தொல்பழங்கால ஓவியங்களுள் பெரும்பான்மை, அங்கு வாழும் பழங்குடி மக்களோடு நெருங்கிய தொடர்புறவு கொண்டிருப்பதை ஆவணப்படுத்தும் அரிய வாய்ப்பும் கிடைத்தது.