

தொல்லியல் துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் முனைவர் ர.பூங்குன்றன். தொல்லியல் - இலக்கியச் சான்றுகளுடன் வேளிர் வரலாற்றை எழுதியது, இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றைக் கண்டறிந்தது, நடுகற்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறிதலில் பங்கேற்றது, 14 ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்தது என்பன போன்ற சிறப்புகளைக் கொண்டவர்.
பணி ஓய்வுக்குப் பிறகும் தொல்லியல் சார்ந்த கற்பித்தல், ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் பூங்குன்றனுடன் உரையாடியதிலிருந்து...
தமிழ் மாணவராக இருந்த நீங்கள் தொல்லியல் துறை நோக்கித் திரும்பியது எப்படி?
எனது ஊர் போளூர் அருகே திருமலை. அங்கு குந்தவை அம்மையார் கட்டிய சமணக் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அது பற்றிய கல்வெட்டுகளைச் சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன். சிறப்பாகப் பாடம் நடத்திய எங்கள் ஆசிரியர் மூலமாகத் தமிழ் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது.
வாணியம்பாடியில் பியூசி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எம்.ஏ., படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தேன். அப்போது, தொல்லியல் துறையில் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. அந்தப் படிப்பை முடித்ததும், அங்கேயே வேலை கிடைத்தது.
தொல்லியல் துறையில் பணிகள் எவ்வாறு இருந்தன?
பெரும்பாலும் கல்வெட்டுகளைத் தேடி ஊர் ஊராகச் சென்று, அவற்றைக் கண்டறிந்து படித்துப் புத்தகங்களாக வெளியிடுகிற வேலை.
பிறகு, சிலைகளைப் பதிவு செய்கிற அலுவலராகப் பணியாற்றினேன். 1975, நவம்பரில் மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் பதவி உயர்வுடன் கோவைக்கு மாற்றலாகிச் சென்றேன். அங்கு நிறைய தொல்லியல் சார்ந்தவற்றைக் கண்டறிந்தேன்.