

தமிழகத்தில் சுயாதீன வரலாற்று ஆய்வறிஞர்களில் செ.திவான் முக்கியமானவர். வரலாற்றில் விடுபட்ட உண்மைகளைப் பதிவுசெய்வது இவரது தனி அடையாளம்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டையில் வசிக்கும் திவான், இதுவரை 190 நூல்கள் எழுதி, தனது சொந்தப் பதிப்பகமான ‘ரெகான் - ரய்யா’ மூலம் வெளியிட்டுள்ளார்.
‘வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லீம்கள்’, ‘பாரதி செல்லம்மாள் உயில்’, ‘பெரிய புராணத்தில் வாழ்க்கை நெறி’, ‘திராவிட இயக்கம் - வரலாற்றுக் குறிப்புகள்’ உள்ளிட்ட நூல் தலைப்புகள் இவரின் பரந்துபட்ட பார்வையை வெளிப்படுத்தும். திவானிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
வரலாற்றில் உலவுகிற கற்பிதங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களைக் கூற முடியுமா?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அவ்வளவாகப் பேசப்படுவதில்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டங்களைப் பல நூல்களில் சான்றுகளுடன் பதிவுசெய்துள்ளேன். மருதநாயகம், புலித்தேவன், வீரபாண்டியக் கட்டபொம்மன், தீரன் சின்னமலை போன்றவர்களின் படைகளில் இஸ்லாமியர்களும் இருந்தனர்.
கேரளத்தில் ஏற்பட்ட மாப்ளா இனத்தவரின் புரட்சி, இந்து - முஸ்லிம் மோதலாகத் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது. அதைத் தெளிவுபடுத்த ‘மலபார் புரட்சி-1921 (முதல் பாகம்)’ என்கிற நூல் எழுதினேன்.
மாப்ளாக்கள் (அரேபிய ஆணுக்கும் கேரளப் பெண்ணுக்கும் பிறந்தவர்) ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியபோது, சரக்கு ரயிலுக்குள் அடைக்கப்பட்டு 70 பேர் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் போத்தனூர் ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலுக்குள் இவர்கள் சடலங்களாகக் கிடந்தனர். அவர்களில் 66 பேர் இஸ்லாமியர்கள்; நான்கு பேர் இந்துக்கள். அனைவரது விவரங்களையும் தேடிப் பிடித்து இந்நூலில் பதிவுசெய்துள்ளேன்.
வாஞ்சிநாதன் குறித்து அண்மைக் காலமாகப் பரப்பப்படும் அவதூறுகள் வருத்தம் அளிக்கின்றன. வ.உ.சிதம்பரனார் குறித்து 28 நூல்களை எழுதியுள்ளேன். வாஞ்சிநாதனின் தியாகத்துக்காக வ.உ.சி.யே அவரைப் போற்றியதை மறந்துவிடக் கூடாது.