

இந்தியாவிலேயே முதன்முதலாக முதியோர் மருத்துவம் பயின்று அதை நடைமுறைப்படுத்திய வி.எஸ்.நடராஜன், முதியோர் நல மருத்துவத் துறையின் தந்தை என அறியப்படுபவர். முதியோர்களுக்கு எனப் பிரத்யேக மருத்துவ முகாம்களைப் பரவலாக்கியது, வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிப்பது, தடுப்பூசி மையம் - மறதி நோய்க்கு எதிரான நினைவாற்றல் மையத்தை நடத்துவது, பள்ளிகளில் ஜூலை 15ஐ முதியோர் மீதான வன்கொடுமைத் தடுப்பு நாளாக அனுசரிக்க வைப்பது, ‘முதுமை எனும் பூங்காற்று’ என்கிற இதழை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர்; மூத்த குடிமக்கள் மன்றத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். பத்ம விருது, பி.சி.ராய் விருது உள்படப் பல விருதுகள் பெற்றவர். 86 வயதிலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் நடராஜனிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
முதியோர் மருத்துவத் துறை எப்படி உங்களுக்கு அறிமுகமானது?
1966இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்டி படித்தேன். மருந்தியல் துறைத் தலைவரான மருத்துவர் எஸ்.அண்ணாமலை எனக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்தார். உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும் வாய்ப்பு அளித்தார். ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், முதியோர் மருத்துவம் பயிலுமாறு ஆலோசனை வழங்கினார்.
சமூக, பொருளாதாரக் காரணிகளும் இணைந்த முதியோர் மருத்துவம் என்னைக் கவர்ந்தது. பிரிட்டனின் சௌத்தாம்ப்டன் மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்கவும் அவர் உதவினார். நான்கு ஆண்டுப் பயிற்சிக்கு, பணியில் இருந்து இரண்டு ஆண்டு விடுப்பு எனக்குக் கிடைத்தது.
இங்கு ஊதியம் மறுக்கப்பட்டாலும், கல்லூரியில் பயிற்சிக்கு ஊதியம் கிடைத்தது. படிப்புக்குப் பின்னர், இந்தியாவுக்கே திரும்பிப் பணிபுரியப் போவதாகக் கூறியதைக் கல்லூரி நிர்வாகம் பாராட்டியது. துறைத் தலைவரான மைக்கேல் ஹால் எனக்குச் சிறப்பாகப் பயிற்சி அளித்தார். எம்ஆர்சிபி பட்டத்தோடு 1978இல் நாடு திரும்பினேன்.