

எழுத்தாளர் மு.ராஜேந்திரனின் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய புதிய தொகுப்புதான் ‘சிப்பாயி’ (களவு போன கதை). இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இரண்டு குறுநாவல்களும், ஐம்பதுகள்-அறுபதுகளைக் கதை நிகழும் காலமாகக் கொண்டுள்ளன. மதுரையை ஒட்டியுள்ள கிராமங்கள்தான் கதையின் களம். அக்கிராமங்களின் தனித்துவம் மிகுந்த மாந்தர்களே கதாபாத்திரங்கள்.
தொகுப்பின் முதல் கதையான ‘சிப்பாயி’ (களவு போன கதை)யில், களவாடப்படும் இரு காளைகளின் வழியாக, களவில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையும், பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் ஓர் ஆவணம் போல பதிவு செய்யப்பட்டுள்ளன. களவில் ஈடுபடுபவர்கள், களவாடும் காளைகளை இன்னொருவருக்கு விற்பதில்லை. அது, அவர்களது தொழில் தர்மமாகக் கருதப்படுகிறது.