

இன்றைய உலகம் அறிவையும் தொழில்நுட்பத்தையும் மையமாகக் கொண்டு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றத்தின் பின்னால் இருக்கும் மிகப் பெரிய சக்தி பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான்.
ஒரு நாட்டின் வளர்ச்சியையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும் தீர்மானிப்பதில் ஆய்வுலகம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், நம் ஆய்வுலகம் உண்மையில் எந்தத் திசையில் பயணிக்கிறது என்கிற கேள்வி எழுப்பப்பட வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. ஆய்வு என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான கருவி அல்ல.
அது புதிய அறிவைப் பெருக்கும் செயல்முறை; சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சி. ஆனால், இன்றைக்கு ஆய்வுகளின் நோக்கம் பல இடங்களில் மாறிவருவதைக் காண முடிகிறது.
பல்கலைக்கழகங்களில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படக்கூடிய ஆய்வுகள், ஏறத்தாழ 10 ஆண்டுகள் வரைகூட நீள்கின்றன. இதற்குக் காரணம் மாணவர்களின் அலட்சியம் மட்டும் அல்ல. சில நேரம் வழிகாட்டல் அமைப்பின் குறைபாடுகளும் பின்னடைவுக்குக் காரணமாகின்றன.
தனது ஆய்வின் நோக்கத்தை ஆய்வாளர் உணராமல் இருப்பதும் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இடைநிலைக் கட்டமாக மட்டுமே ஆய்வைக் கருதுவதும் வருத்தம் அளிக்கின்றன.
தகவல்களைச் சேகரிப்பதையே சிலர் ஆய்வாகக் கருதுகின்றனர். இணையத்தில் கிடைக்கும் தரவுகளைத் தொகுத்து எழுதுவது ஆய்வு அல்ல. ஆய்வாளரின் தனித்துவமான பங்களிப்பு என்ன என்பதுதான் முக்கியம்.
நெறியாளரின் பங்களிப்பு
இதில் நெறியாளர்களின் பொறுப்பை மறந்துவிட முடியாது. ஓர் ஆய்வாளரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நெறியாளரின் பங்கு மிகப் பெரியது. நல்ல நெறியாளர் ஒரு மாணவரை அறிவியல் நேர்மையையும் சமூகப் பொறுப்புணர்வையும் நோக்கி வழிநடத்துவார்.