

ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது, இன்று பல நடுத்தர, ஏழைக் குடும்பங்களுக்குப் பொருளாதாரப் போராட்டமாக மாறியுள்ளது. தனியார் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் சில அரசு அதிகாரிகளின் துணையுடன் கட்டணக் கொள்ளை நடத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் கல்விக் கட்டண உயர்வு பெற்றோர்களைக் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது.
சட்டமும் நடைமுறையும்
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணம் நிர்ணயிப்பதைத் தடுத்தல், பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்தல், கல்வியில் சமத்துவம், அணுகுதல் வாய்ப்பை உறுதிசெய்தல், கல்வி வணிகமாக மாறுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காகத் தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் முறைப்படுத்துதல்) சட்டம், 2009 இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின் பிரிவு 2 (e), ‘கட்டணம் என்பது, எந்த ஒரு வகுப்பு அல்லது படிப்புப் பிரிவில் ஒரு மாணவரைச் சேர்ப்பதற்காக ஒரு பள்ளியால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வசூலிக்கப்படும் - எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் சரி - எந்த ஒரு தொகையையும் குறிக்கும்’ என வரையறை செய்கிறது.
பிரிவு 6. (1) இன்படி, கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழு, பள்ளியின் இருப்பிடம், உள்கட்டமைப்பு வசதிகள், நிர்வாகம் - பராமரிப்புக்கான செலவினம், பள்ளியின் வளர்ச்சி - மேம்பாட்டுக்குத் தேவையான நியாயமான உபரி நிதி, வேறு ஏதேனும் பரிந்துரைக்கப்படும் காரணிகள் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு ‘கல்விக் கட்டண நிர்ணயக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் செலவுகள் - வசதிகளை ஆய்வுசெய்தல்; வகுப்புவாரியாகக் கட்டணம் நிர்ணயித்தல்; அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்; பெற்றோரின் புகார்களை விசாரித்தல் ஆகியவை இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரங்கள்.
எனினும் இச்சட்டத்தின் முழுமையான செயல்பாட்டில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. பல தனியார் பள்ளிகள் அரசு அல்லது கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டண விவரங்களைப் பெற்றோர்களிடம் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. பல்வேறு பெயர்களில் கூடுதல் தொகைகள் வசூலிக்கப்படுகின்றன.
கல்வித் துறை அதிகாரிகள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பல சந்தர்ப்பங்களில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதாகவும் முறைகேடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. புகார் அளித்தால் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்கிற அச்சத்தில் பெற்றோர் இருக்கின்றனர்.