

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகளை மூடத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் தொடங்கிச் சந்துக் கடைகள் என்று சொல்லப்படும் சட்டவிரோத மது விற்பனையையும் கட்டுப்படுத்தத் தமிழகத்தின் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன.
தங்கள் பகுதியில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்திப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மதுப் பழக்கத்தால் குடிநோயாளிகளாகவே மாறிவிட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், டாஸ்மாக் கடைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் நடமாடவே முடியாத அளவுக்குச் சங்கடங்களையும் தொந்தரவுகளையும் சந்தித்த பெண்கள் எனப் பாதிக்கப்பட்ட பலரின் குரல்கள் அவை.
குலைந்துபோன குடும்பங்கள்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் மதுக்கடைகளால், கட்டுப்பாடற்ற மது விற்பனையால் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளும் பொருளாதார இழப்புகளும் கணக்கில் அடங்காதவை. குடியினால் ஏற்பட்ட ஒருவரின் மரணம், அவரது குடும்பத்துக்கு என்றும் ஈடுசெய்துவிட முடியாத பேரிழப்பாகவே இருக்கும்.
அதிலிருந்து மீண்டு வருவதற்கும், தந்தையை இழந்த தன் குழந்தைகளுக்கான ஒரு வாழ்க்கையை மறுகட்டமைப்பதற்கும் அந்தக் குடும்பத் தலைவி செத்துப் பிழைக்க வேண்டியிருக்கும். இது போன்ற பல குடும்பங்களைப் பார்க்க முடிகிறது.