

இலக்கியத்திற்கு முதன்மை தந்து எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற காலத் தொடர்ச்சியில் மீமிசைச் செயல்பாடாக விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் ‘கனவு இல்லம்’ திட்டம் தமிழ்நாடு அரசால் அமைந்திருக்கிறது. இப்பயன்பாட்டிற்குள் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார்’ விருது பெற்றவர்களைப் புறத்தே நிறுத்தி வைத்திருக்கும் பாராமுகம் ஏனென்று தெரியவில்லை.
இலக்கியத்துக்குப் பெரும்பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு 03-06-2021 அன்று கனவு இல்லம்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சாகித்ய அகாதமி, ஞானபீட விருது உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்கள் இந்தத்திட்டத்தில் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சாகித்ய அகாதமி விருது பெற்றவர்கள் என்று கூறியபோது, அகாதமியின் அனைத்து விருதுகளையும் பெற்றவர்கள் பயன்பெறலாம் என்றே வெளிஉலகில்பேசப்பட்டது.