

எக்காலத்திலோ எழுதப்பட்ட திருக்குறளின் உள்ளடக்கம் சமகாலச் சமூகத்துக்கும் பொருத்தமாக இருப்பதால் அது உலகப் பொதுமறையாக ஏற்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தமிழ்ப் பாடமாகக் கற்பித்தல், திருவள்ளுவர் நாளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகளும் பட்டிமன்றங்களும் நடத்துதல், மொத்தக் குறள்களையும் ஒப்பித்தவர்களைப் போற்றுதல் போன்ற நிலைகளில் திருக்குறள் இருக்கிறது. வாழ்க்கையின் சகலச் செயல்களும் பேசப்பட்டிருக்கும் திருக்குறளை, அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றுகிறோமா என வினவினால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. இதற்கு நேர்மாறான நிலை காலனிய காலத்தில் இருந்தது.
ஓலைச் சுவடிகளைக் கண்டெடுத்து, அச்சு வடிவத்துக்குப் பரிமாற்றிய போக்கில் திருக்குறளையும் அச்சாக்கிய பின்னர், அது சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது. சங்ககால இலக்கியங்களில் அதிகமாக மக்களின் கவனத்தைத் திருக்குறள் பெற்றிருந்ததைக் காலனிய அச்சு ஊடகங்களில் காண முடிகிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொடக்கத்திலும், உள்ளடக்கத்திலும் திருக்குறளை மேற்கோள்காட்டி விவாதங்கள் இடம்பெற்றன. திருவள்ளுவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்கிற விவாதம் அக்காலத்தில் இருந்தாலும்கூட, திருக்குறள் சாதியைக் கடந்து பொதுமறையாக உருமாறியது. பொதுவான பத்திரிகைகள் மட்டுமன்றி, சுயசாதிகளின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களும் திருக்குறளை அன்றாட வாழ்க்கை முறையாக்க வேண்டும் என வலியுறுத்தின.