

‘ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்’ என்பது பழந்தமிழர் வாழ்க்கை. ஆனால், இன்றும் அது நிதர்சனமா? ஓர் அதிர்ச்சியான செய்தியைத் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு ஜூன் 2025ல் கூறியது.
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் 20 சதவீதம் வேளாண்மை குறைந்திருக்கிறது என்றும், உழவுத் தொழிலில் ஈடுபட்டோர் வேறு துறைகளுக்கு நகர்ந்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறியது.
அதே தருணத்தில் தமிழகத்தின் அண்மை வரலாற்றில் 3.5 லட்சம் ஏக்கர் சாகுபடிப் பரப்பு 6.5 லட்சம் ஏக்கராக அதிகரித்திருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஹெக்டேர் மகசூல் 2,835 கிலோவாக இருந்தது, பிறகு 4,180 கிலோவாகி இந்த ஆண்டு மகசூல் 5,700 கிலோ என உயர்ந்திருந்தது. ஒரே ஆண்டில் மேட்டூர் அணை ஏழு முறை நிரம்பியது.
இவ்வளவுக்கும் கொள்முதல் பணிகளில் சாக்கு, படுதா, தார்ப்பாய், சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்து வாகனம், பணி ஆள்கள் எனப் பல அம்சங்களில் பற்றாக்குறை மிகுந்திருந்தது. சாகுபடிப் பரப்பிலும் மகசூலிலும் சாதனை எட்டப்பட்ட நிலையில் எவ்வாறு இப்படி ஒரு நிலைமை? அதற்குப் பரிகாரம் என்ன?
வேளாண்மையை இளமைப்படுத்துதல்
தமிழக வேளாண்மையை இளமைப்படுத்துதல் இன்றைக்கு முக்கியத் தேவையாகிறது. கிராமங்களில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களின் சராசரி வயது 53 என ஓர் ஆய்வு கூறுகிறது. 2023-24இல் ரூ.15,540 கோடி கடன் பெற்ற உறுப்பினர்களின் சராசரி வயது 50. உள்ளபடியே கூட்டுறவு வங்கி என்பது உழவுத் தொழிலில் தமிழகத்தின் அருங்கொடை.
இந்தியாவின் முதல் கூட்டுறவுச் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் திரூர் கிராமத்தில் 1904இல் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பே விவசாயக் கடன் சங்கங்களை அமைப்பது குறித்து சென்னை மாகாண அரசு 1895இல் பிரடெரிக் அகஸ்டஸ் நிக்கல்சன் என்பவரை நியமித்து அறிக்கை கேட்டது (அவர் பெயரில் தஞ்சையில் வங்கி உள்ளது). இப்போது திட்டமிட்டாலும் நிலைமையைச் சீர்செய்ய முடியும்.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்துத் திட்டமிட்டு தமிழ்நாடு வங்கியை உருவாக்கி விவசாயத்தை இளமைப்படுத்தலாம். உழவர்களின் முக்கியப் பிரச்சினை அவர்களுக்குக் கிடைக்கும் வருவாய் குறித்தது. ‘பிஎம் கிசான்’ கணக்குப்படி ஓர் உழவருக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.