

‘சூரியனை மையமாகக் கொண்ட அண்ட அமைப்பை முதன்முதலில் முன்வைத்தவர் யார்?’ - மகாராஷ்டிர மாநிலப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்புப் பாடநூல் இந்தக் கேள்வியை மீண்டும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது. பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்கிற கருத்தை முதன் முதலில் முன்வைத்தவர் ஆரியபட்டர் என்று அந்தப் பாடநூல் கூறுகிறது. இந்தக் கூற்று எந்த அளவுக்கு வரலாற்று உண்மையைப் பிரதிபலிக்கிறது?
ஆரியபட்டீயம் சொல்வது என்ன?
ஆரியபட்டர் தம் காலத்தை விஞ்சிய சிந்தனையாளர் என்பதில் ஐயமில்லை. பொ.ஆ. (கி.பி.) 499இல், தமது 23ஆவது வயதிலேயே புகழ்பெற்ற ‘ஆரியபட்டீயம்’ (Aryabhatiyam) என்கிற நூலை அவர் இயற்றினார்.
இந்த நூல் நான்கு பகுதிகளைக் கொண்டது. அவற்றில் கோளபாதம் (கோளாத்யாயம்) என்கிற பகுதியில் பல புரட்சிகரமான கருத்துகளை அவர் முன்வைத்தார். பூமி எவ்வித ஆதாரமும் இன்றி விண்வெளியில் மிதக்கும் ஒரு கோளம் என்பதைத் தெளிவாகக் கூறினார். விண்மீன்கள் நாள்தோறும் வானில் நகர்வதுபோல் தோன்றுவதற்குப் பூமி தன் அச்சில் சுழல்வதே காரணம் என்றும் விளக்கினார்.
ஆனால், அவர் முன்வைத்த அண்ட அமைப்பு எத்தகையது? அதே நூலின் ஆறாவது செய்யுள் கூறுவது தெளிவானது. இதன்படி, நான்கு பூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றால் ஆன உருண்டையான பூமி, விண்மீன்களின் கூடு அல்லது கோளத்தின் நடுவே, விண்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது.
அதைச் சுற்றிக் கோள்களின் சுற்றுப்பாதைகள் அமைந்துள்ளன. இது தெளிவாக ஒரு புவிமைய அண்ட அமைப்பையே சுட்டுகிறது. பாஸ்கரர் உள்ளிட்ட பல அறிஞர்கள் எழுதியுள்ள உரைகள் அந்த ஐயத்தைப் போக்குகின்றன. கமத்யம் என்பது விண்வெளியின் சரியான மையத்தையே குறிக்கிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, இந்த அண்ட அமைப்பின்படி பூமியே மையம்; பூமியைச் சுற்றியே சூரியன் உள்ளிட்ட கோள்கள் இயங்குகின்றன.
நுட்பமான வேறுபாடு
அப்படியானால், ஆரியபட்டரைச் சூரிய மையக் கோட்பாட்டுடன் தொடர்புபடுத்தும் கருத்து எங்கிருந்து தோன்றியது? கோள்களின் இயக்கத்தைக் கணக்கிடுவதற்கு இரண்டு வகையான துணைவட்டக் கணித முறைகளை ஆரியபட்டர் பயன்படுத்தினார்.
அவை சீக்ர (sighra), மந்த (manda) எனப்பட்டன. இவற்றில் சீக்ர துணைவட்டங்களின் சுற்றுக்காலங்கள், அந்தந்தக் கோள்களின் சூரிய மையச் சுற்றுக்காலங்களுடன் அடிப்படையில் ஒத்துப்போகின்றன எனக் கணிதவியலாளர் பி.எல்.வான் டெர் வார்டன் (Bartel Leendert van der Waerden) 1970இல் வாதிட்டார்.