

பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்போவதாக அறிவித்துக் கைத் தட்டல்களைப் பெற்ற ஐரோப்பிய ஒன்றியம் அதிலிருந்து பின்வாங்கியிருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. 2035இல் தங்கள் நாடுகளில் பெட்ரோல் / டீசலில் ஓடும் வாகனங்களுக்கு முழுத் தடை என்று ஐரோப்பிய ஒன்றியம் ஆர்ப்பாட்டமாக அறிவித்தது.
சுற்றுச்சூழல் மாசுபடுதலைத் தவிர்க்கும் நோக்கத்திலும், பெட்ரோலிய இறக்குமதி காரணமாக உண்டாகும் நிதிச் சுமையில் இருந்து மீளவும் பல நாடுகளும் மின்வாகனங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கத் தொடங்கின. இப்போது இப்படி ‘யு-டர்ன்’ போட என்ன காரணம்?
நம்பிக்கை அளித்த ஜாம்பவான்கள்: பல முன்னணி நிறுவனங்களும் இதை வழிமொழிந்தன. அமெரிக்காவில் டெக்சாஸைத் தலைமையகமாகக் கொண்ட, எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவின் முதன்மைத் தயாரிப்பு மின்வாகனமே என்றானது.
ஆடி, போர்சே, ஸ்கோடா ஆகிய பிரபல கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த மற்றொரு பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், 2030இல் ஐரோப்பாவில் தாங்கள் உருவாக்கும் கார்களில் 70 சதவீதம் மின்வாகனமாகத்தான் இருக்கும் என்று அறிவித்தது. போதாக்குறைக்குச் சீக்கிரமே அதை 80 சதவீதம் என்று திருத்திக் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கைத்தட்ட வைத்தது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டெலாண்டிஸ் நிறுவனம், வருங்காலத்தில் 100 சதவீதம் மின்வாகனங்களை உற்பத்தி செய்து சாலைகளுக்கு அனுப்பப்போவதாகச் சத்தியம் செய்தது. அமெரிக்காவில் தற்போது விற்பனையாகும் வாகனங்களில் பத்தில் ஒரு பங்குதான் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள்.
எனினும் செவர்லே, ஜிஎம்ஸி, காடிலாக் போன்ற பிரபல பிராண்ட் கார்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், உடனடியாக இல்லையென்றாலும் 2035இல் முழுக்க மின்வாகனங்களுக்கு மாறிவிடப் போவதாகக் கூறியது.