

தோழர் நல்லகண்ணு தமது கொள்கை நேர்மை காரணமாகவும், ஆளுமையின் சிறப்புக் காரணமாகவும் தமிழகத்தில் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒருவராகக் காணப்படுகிறார்.
பொதுவுடைமை இயக்கத்தின் புகழ்பூத்த தலைவர்கள் தொழிற் சங்கங்களின், தொழிலாளிகளின் பிரதிநிதிகளாகப் போற்றப்படுவதே மரபு. அத்தகைய ஒரு பாரம்பரியம் தமிழ்நாட்டிலும் உண்டு.
ஆனால், தோழர் நல்லகண்ணு விவசாயத் தொழிலாளியின் ஊடாக அத்துறையில் அவர் ஆற்றிய பெரும் பணியின் காரணமாக முன்னுக்கு வந்துள்ளவர். அவரது ஆளுமை சுட்டும் இயல்பு, அவரைத் தமிழ்நாட்டின் அடிநிலை மக்கள் பிரதிநிதியாக நம் முன் நிறுத்துகிறது.
விவசாயத் துறையின் மூலம் வருவதினால், அவர் இந்தப் பண்பாட்டின் பிரதிநிதியாகவும் விளங்குகிறார். சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அனுபவங்களினாலும் மார்க்சியப் பரவலில் இப்போது ஒரு பேருண்மை வலியுறுத்தப்படுகிறது.
அதாவது பொதுவுடைமை இயக்கம், தான் தொழிற்படுகின்ற சமூகத்தின் பண்பாட்டினது முற்போக்கான அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு வளர்தல் வேண்டும் என்பதாகும். ஏற்கெனவே, கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் இது வெற்றிகரமாகத் தொழிற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தோழர் நல்லகண்ணுவினுடைய ஆளுமைக் கணிப்புடன் பொதுவுடைமைக்கு வேண்டிய அடிநிலை விவசாயப் பண்பாட்டு ஊக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு முக்கியமான விஷயம்.
ஏனெனில் தமிழ்நாட்டில் இடதுசாரிக் கொள்கைகள் தொடங்கிய காலத்தில், அது பகுத்தறிவு வாதத்தோடு தொடர்பற்று நின்று, அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் அடிநிலைப் பண்பாட்டு அம்சங்கள் பலவற்றைத் தன் வளர்ச்சி நிலையில் வளத்துக்குப் பயன்படுத்தவில்லை.
உண்மையில், அந்த நிலையில் நாட்டின் பண்பாட்டு உயிர்களோடு அதிகத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், தோழர் ஜீவா அவர்கள் அந்தப் போக்குக்குப் புறனடையாக (விதிவிலக்காக) இருந்தார்.
தமிழ்நாட்டில் பொதுவுடைமை வர வேண்டுமெனில் அது கம்பனையும் பாரதியையும் உள்வாங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இன்று நல்லகண்ணுவோ அந்தப் பாரம்பரியத்தில் வந்து, தமிழ்நாட்டில் விவசாயிகள் பண்பாட்டினைப் பொதுவுடைமைக் கருத்து நிலைக்கான தளமாகக் காண்கிறார்.
நல்லகண்ணுவின் பொதுவுடைமை தமிழ் மண்ணுக்குள் இருந்துவருவது. அந்த வலுதான் இன்று அவரைத் தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மாத்திரமல்லாது, அனைத்திந்திய முக்கியத்துவம் உடைய ஒருவராகவும் ஆக்கியுள்ளது.
தனிப்பட்ட நிலையில் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் நவீன கால வரலாற்றின் சமூகப் பிரச்சினைக்கான விளக்கங்களைத் தோழர் நல்லகண்ணு மூலம் அறிந்தது போன்று தெளிவாக வேறு ஒருவரிடத்திலிருந்தும் நான் அறிந்துகொள்ளவில்லை.
வள்ளலாருடைய இயக்கத்தின் சமூகப் பின்புலத்தை அவர் மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து கூறுகின்றபோது கேட்கச் சிலிர்க்கும். தோழர் நல்லகண்ணுவிடம் நான் கண்ட மிகப் பெரிய பண்பு, அவர் எப்போதும் ஒரு மாணவனாக இருக்கின்றார் என்பதேயாகும். அறிவுக்கான தேடல் அவரை விருப்பத்துக்குரிய தலைவராக்கியுள்ளது.
தமிழ்ப் பாரம்பரியத்தில் இறைவனை வாழ்த்துகின்ற ஒரு மரபு உண்டு. ‘இறைவன் வாழ்த்தப்பட வேண்டுமா?’ என்ற ஒரு வினாவும் உண்டு. அதற்குப் பதிலாகச் சொல்லப்படுவது மிக முக்கியமானது. இறைவனை வாழ்த்துவதன் மூலம் அவர்களது நம்பிக்கையின்படி மக்கள் எல்லோரையும் வாழ்த்துவது ஆகும்.
தோழர் நல்லகண்ணுவை வாழ்த்தும்போது, தமிழ் பயிலும் எனக்கும் அந்த உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. அவரை வாழ்த்துவதன் மூலமாக நம்மை நாமே வாழ்த்துகிறோம். நமது எதிர்கால லட்சியக் கனவுகளை வாழ்த்துகிறோம். நமது பண்பாட்டை வாழ்த்துகிறோம்.
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
| இங்கே இடம்பெற்றுள்ள கட்டுரை, ஆர்.நல்லகண்ணு குறித்து விரிவான நூலான ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலில் வெளியானது. |