

தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதை நாம் அறிவோம். இலவசத் திட்டங்களால் உடனடிப் பயன்கள் உண்டு என்றாலும், நிலையான வளர்ச்சிக்குப் பயனளிக்கும் இலவசக் கல்வி கண்டுகொள்ளப்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
வறுமையை ஒழித்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், கல்வி - சுகாதார வசதிகளை அனைவருக்கும் உறுதிசெய்தல் போன்ற நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு 1951 முதல் 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
2015க்குப் பிறகு ஐந்தாண்டுத் திட்டங்கள் கைவிடப்பட்டதால் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சமநிலை போன்ற நிலைத்த வளர்ச்சிக்கான திட்டங்கள், சமூக ஜனநாயகக் கொள்கைகளின் நடைமுறையாக்கத்தில் அரசியல் கட்சிகளின் கவனமும் அரசின் கவனமும் திசைமாறி உள்ளன. குறிப்பாக, கல்வியில் பல பின்னடைவுகள் நிகழ்ந்திருக்கின்றன.
சட்டமும் நடைமுறையும்
இந்தியாவில், 2002இல் அரசமைப்புச் சட்டக்கூறு ‘21-ஏ’இல் 86ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைச் செயல்படுத்துவதற்காகக் கல்வி உரிமைச் சட்டம் (2009) நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசமாகவும் தரமாகவும் கல்வி வழங்குவதை மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாக அறிவித்துள்ளது.
ஆனால், சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் அரசுப் பள்ளிகளும் இலவசக் கல்வியும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருகின்றன. வசதியானவர்களால் அரசுப் பள்ளிகள் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளன.
தனியார் கட்டணப் பள்ளிகளால் ஏழைகள் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளனர். கல்வியில் தனியார்மயமும் வணிகமயமும் அனுமதிக்கப்படுவதால் ஜனநாயகத்தின் அடித்தளமே வலுவிழந்து வருகிறது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சமமான இலவசக் கட்டாயக் கல்வி அரசால் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதே கல்வி அடிப்படை உரிமை என்பதன் பொருள். கல்வி உரிமையை உறுதிசெய்வதற்குத் தேவையான நிதி அரசால் ஒதுக்கப்பட வேண்டும்.
கோத்தாரி கல்விக் குழு (1964 – 1966) மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. ஆனால், 60 ஆண்டுகள் கடந்த பிறகும் இப்பரிந்துரை ஏற்கப்படவில்லை.