கங்கைக் கரையில் ஓர் உரையாடல் | இடம் பொருள் மனிதர் - 4

‘உள்ளே இருக்கும் ஆசாமியைப் பார்த்துவிட்டீர்களா?’ என்கிற கேள்வியுடன் தொடங்கியது பேச்சு
கங்கைக் கரையில் ஓர் உரையாடல் | இடம் பொருள் மனிதர் - 4
Updated on: 
3 min read

காசி விசுவநாதர் ஆலயத்தின் நான்காம் எண் வாயிலுக்கு வெளியே சாலை நடுவே பாதுகாப்புக்காக அமைத்திருந்த கம்பிவேலியின் தடுப்பு மேடையில் உட்கார்ந்திருந்தேன். உடன் வந்தவர்கள் ஊர் சுற்றிப் பார்க்கவும் அங்காடி உலாவுக்காகவும் போயிருந்தார்கள். வெயில் சாய்ந்துகொண்டிருந்தது.

கொஞ்சம் அகலமாகவே இருந்த திண்டில் பலரும் உட்கார்ந்திருந்தார்கள். வெவ்வேறு முகமும் உடல்மொழியும் கொண்ட பக்தர்கள். அரை, முக்கால் நிர்வாணச் சாமியார்கள். பக்கிரிகள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என்று கலப்பு மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். முதன்மைப் படித்துறைகளில் ஒன்றான தசாசுவமேதக் கட்டத்துக்குச் செல்லும் அந்தச் சாலை நெரிசலாக இருந்தது.

சிலர் கங்கையில் மிதக்க விடுவதற்காக அகல் விளக்குகளையும் சாமந்திப் பூக்களையும் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். “விசுவநாதரைத் தரிசிக்க வந்திருக்கிறீர்களா?” என்கிற கேள்வியில் கவனம் கலைந்தது. கேள்வி இந்தியில் இருந்தது. அதேமொழியில் பதில் சொல்ல வார்த்தைகளை யோசித்தபடி கேள்வியின் திசையைப் பார்த்தேன்.

என்னை ஒட்டி உட்கார்ந்திருந்த கேள்வியாளர் என் முகத்தையே உற்றுப்பார்த்தார். திடமான ஆகிருதி. நாற்பதுக்கும் கூடுதலான வயது. வெயிலில் பழுப்பேறிய செங்கறுப்புச் சருமம். வரலாற்று நாடகத்திலோ புராண நாடகத்திலோ வரும் கதாபாத்திரம் போன்ற தோற்றம். இழுத்துக் கட்டிய தலைப்பாகை. நெற்றியில் விசாலமான நாமம் இட்டிருந்தார். தோளில் காவித்துண்டு. கழுத்தில் ருத்ராட்ச, மணிமாலைகள். கையில் தோல்பை. மணிக்கட்டில் பல வண்ணக் கயிறுகள். முறுக்கிய மீசை. கவனமாக ஒழுங்குபடுத்திய தாடி.

அந்நிய இடங்களில் அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவாடுவது ஆபத்து என்கிற எச்சரிக்கை உணர்வுடன் அவரை ஏறிட்டேன். குழிந்த கண்கள் பளபளத்தன. அது எச்சரிக்கை உணர்வை அதிகரித்தது. வாயை இறுக மூடிக்கொண்டேன். “மதராசியா?” என்று மீண்டும் கேட்டார்.

“இல்லை” ஒற்றைச் சொல் பதிலில் இருந்த அசட்டையைப் பொருட்படுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார். “உள்ளே இருக்கும் ஆசாமியைப் பார்த்துவிட்டீர்களா?” என்றார். கேள்வி புரியவில்லை. சில நொடிகளுக்குப் பின்னர் பிடிபட்டபோது சிரிப்பு வந்தது. அவர் குறிப்பிட்டது ஆலயத்துக்குள் இருக்கும் கடவுளை என்பது புரிந்ததும் சிரிப்பு நீடித்தது. நாமதாரிக்கு அது போதுமானதாக இருந்தது.

“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று தொடங்கி நீளமான இந்தியில் சரளமாகப் பேசத் தொடங்கினார். அதைப் புரிந்து கொள்ளும் மொழியறிவு இல்லை என்று அரைகுறை வார்த்தைகளில் சொன்னதும் பேச்சை நிறுத்தி உற்றுப் பார்த்தார். “ஆங்கிலம் புரியுமா?” என்றார். தலையாட்டினேன்.

Loading content, please wait...

X