மீத்தேன் போராட்டத்தின் முழு வெற்றி!

தமிழகத்தின் சுற்றுச்சூழலைக் காக்க இன்னொரு முக்கியப் பணியும் மிச்சம் இருக்கிறது
மீத்தேன் போராட்டத்தின் முழு வெற்றி!
Updated on: 
3 min read

மன்னார்குடி மீத்தேன் திட்டம் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் - தஞ்சை மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய மன்னார்குடி மீத்தேன் திட்டத்தை ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ (GEECL) நிறுவனம் மேற்கொண்டுவந்த நிலையில், மாநில அரசின் சட்டரீதியான தடையும் மத்திய அரசின் நடவடிக்கையும் அந்நிறுவனத்தின் தஞ்சை அலுவலகத்தை 2016இல் மூடவைத்தன.

தொடர்ந்து நடந்த நீதிமன்ற மத்தியஸ்த (Mediation) நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டின் இறுதியில் முடிவுக்குவந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் இத்திட்டத்திலிருந்து முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

எதிர்க் குரல்

2010-களின் தொடக்கத்தில், தஞ்சாவூர் - திருவாரூர் மாவட்டங்களை மையமாகக் கொண்டு நிலக்கரிப் படுகை மீத்தேன் (Coal Bed Methane - CBM) எடுக்கும் திட்டத்தை மத்திய அரசும் ஜிஇஇசிஎல் நிறுவனமும் தொடங்க முயன்றன. மன்னார்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் ஏறக்குறைய 600-1,500 அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி அடுக்குகளில் இருந்து மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடிநீர் வீழ்ச்சி, கடல் நீர் உட்புகுதல், விவசாயப் பாதிப்பு ஆகியவற்றால் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்னும் அச்சம் எழுந்தது. இத்திட்டத்துக்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் 2011இல் தஞ்சையில் நடைபெற்றபோது எந்த எதிர்ப்பும் எழவில்லை.

ஆனால், 2012 ஜனவரியில் திருவாரூர் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதில் விவசாயச் சங்கங்களின் பங்கு பிரதானமானது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 2013இல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். திட்டத்தை ஆராய வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டது.

வல்லுநர் குழு அறிக்கை

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள், பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், டிட்கோ ஆகிய துறைகளின் அதிகாரிகளைக் கொண்ட இக்குழு, அனைத்துக் கோணங்களிலிருந்தும் விரிவாக ஆராய்ந்தது.

ஜிஇஇசிஎல் நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அக்குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டது. நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுக்கும் துறையைச் சேர்ந்த வல்லுநர்களுடனும் இக்குழு ஆலோசனை நடத்தியது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in