

இணையம் எந்த அளவுக்கு வணிகமயமாகி இருக்கிறது என்பதையும், இணையத்தின் முக்கிய உள்கட்டமைப்பு ஒரு சில பெரிய நிறுவனங்களையே சார்ந்திருக்கிறது என்பதையும் நாம் எந்த அளவு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை.
ஆனால், அண்மையில் நிகழ்ந்த கிளவுட்பிளேர் முடக்கம், இதன் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறது. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள கிளவுட்பிளேர் வழங்கும் சிடிஎன் சேவையின் தன்மையையும், அதன் தேவையையும், முக்கியமாக அதன் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பதறிய இணையம்: சிடிஎன் என்பது ‘கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்’கின் சுருக்கம். இணையத்தளங்கள் வழங்கும் சேவையைப் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பெற இந்த வலைப்பின்னல் வழிசெய்கிறது. இணையத்தளங்களை நுகர்வோர் அணுகும்போது அவர்களின் சொடுக்கு ஒரு கோரிக்கையாக சர்வருக்குச் சென்று, அங்கு நிறைவேற்றப்படுவதாகப் புரிந்துகொள்ளலாம். சர்வர்கள்தான் இணையத்தளங்களைத் தாங்கி நிற்கின்றன.
ஒற்றை சர்வரை இணையத்தளங்கள் சார்ந்திருக்கும்போது, அதிகப் போக்குவரத்து வந்தால் கோரிக்கையை நிறைவேற்றத் தடுமாறும். இத்தகைய பிரச்சினைகளுக்கு, சிடிஎன் என்னும் ‘உள்ளடக்க வலைப்பின்னல் வழங்கல்’ சேவை மூலம் கிளவுட்பிளேர் போன்ற நிறுவனங்கள் தீர்வு காண்கின்றன.
இந்நிறுவனங்கள், இணையத்தளங்களின் உள்ளடக்க வடிவத்தைச் சேமித்து, அவற்றுக்கான நகல் சர்வர்களை உருவாக்குகின்றன. இந்த நகல் சர்வர்களைக் கொண்டு இணையவாசிகளுக்குச் சேவை அளிக்கின்றன. இப்படிப் பல சர்வர்களை, பல இடங்களில் அமைப்பதால் இணையவாசிகள் அணுகும்போது வேகக் குறைவோ, தாமதமோ ஏற்படாது.