

அண்மையில் காலநிலை மாற்றம் தொடர்பாக ClimateRISE alliance என்னும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தேசியப் பொதுச் சுகாதாரத் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘இந்தியாவின் காலநிலை – சுகாதாரச் சந்திப்புகள் – மீள்திறனுக்கான பாதைகள்’ என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த அறிக்கை, காலநிலை மாற்றங்கள் இனிமேல் இந்தியாவில் சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகளை மட்டும் கொண்டுவரப்போவதில்லை; பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கும் சவால்விடும் அளவுக்கு அவை வளர்ந்துவருகின்றன என்று எச்சரித்துள்ளது.
“கடந்த 30 ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தால் உலக அளவில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 40 சதவீத மாவட்டங்கள் காலநிலை மாற்றம் தொடர்பான விளைவுகளால் அதிக அபாயத்தை எதிர்கொள்கின்றன.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா இப்போது குளிர் அலைகளிலிருந்து வெப்ப அலைகளுக்கும் வெப்ப அலைகளிலிருந்து குளிர் அலைகளுக்கும் அடுத்தடுத்து விரைவாக மாறுவதால், இந்தக் காலநிலை மாற்ற விளைவுகள் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களோடு முடிந்துவிடாமல் தொற்றுநோய்ப் பரவல், சுகாதாரச் சேவை வழங்குதல் போன்றவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
அதிகரிக்கும் தொற்றுநோய்கள்
மிகவும் வெளிப்படையாகத் தெரிகிற தாக்கங்களில் முக்கியமானது, டெங்கு பாதிப்பு. உலகளாவிய டெங்கு பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் இருக்கிறது. அதிகரித்துவரும் வெப்ப அலைகளும் மாறிவரும் மழைப்பொழிவுகளும் மலேரியா, சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை இந்தியாவில் இதுவரை தாக்கம் செலுத்தாத இடங்களுக்கும் பரப்புகின்றன.
முன்னர் குறைந்த அளவிலான பாதிப்புகளைப் பதிவுசெய்த இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்படப் பல குளிர்ப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், திடீர் வெள்ளப்பெருக்கு பொதுச் சுகாதார அபாயங்களை இன்னும் தீவிரப்படுத்துகிறது.
எடுத்துக்காட்டாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் குடிநீருடன் அசுத்த நீரும் கலந்துவிடுவதால் கல்லீரல் அழற்சிக் காமாலை ஏ, காலரா, ஈ. கோலை என்னும் பாக்டீரியா தொடர்பான குடல் நோய்கள் அதிகமாகப் பரவுகின்றன. வெள்ளம் வடியும்போது, லெப்டோஸ்பைரோசிஸ் என்னும் எலிக் காய்ச்சலும் பரவுகிறது.