

பொதுவாகப் பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களின் படங்களே முன்னிறுத்தப்படுவதைப் பார்த்துவருகிறோம். இதனால், ஏற்கெனவே பிற்போக்குத்தனங்களில் உழன்றுகொண்டிருக்கும் சமூகத்தில், மீண்டும் பல பிற்போக்குத்தனங்கள் ஆரவாரமாக உறுதிப்படுத்தப்படும்.
உள்ளீடற்ற கேளிக்கையை எவ்வளவு பெரிதாக, எவ்வளவு பிரம்மாண்டமாக, எவ்வளவு தீவிரமாகச் செய்யலாம் என்பது குறித்தே பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் மெனக்கெடுகிறார்கள். அதைப் பெரிதாகச் சந்தைப்படுத்தி, அதிகப் பணத்தை வசூல் செய்துவிடும் பேராசை மட்டுமே பரவலாக இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பிரம்மாண்டமாக முன்னிறுத்தப்பட்ட பல தமிழ்ப் படங்கள் பல்லிளித்தன.
‘வசூல்ரீதியில் வெற்றி’ என்கிற முத்திரை குத்தப்பட்ட படங்கள் ரசிகர்கள், விமர்சகர்களை ஈர்க்கவில்லை. மலையாளப் படங்கள் போலச் சிறந்த படங்கள் தமிழில் வெளியாகவில்லையே என்கிற அயர்ச்சிக்கு இந்த ஆண்டு சிறிது விடுதலை கிடைத்தது.
மனிதர்களை, கதையை மையப்படுத்திய சிறிய பட்ஜெட் படங்கள் ஆச்சரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றன. தமிழ் சினிமா மெல்லப் புதியவர்கள் கைக்குச் சென்றுவருவதன் அறிகுறியாக இதைக் கருதலாம்.
ஆசுவாசம் தந்த படைப்புகள்: அபிஷன் ஜீவிந்த் என்கிற 25 வயது இயக்குநரின் முதல் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’, இந்த ஆண்டின் ‘எதிர்பாராத வெற்றிப் படமாக’ பேசப்படுகிறது. நிஜத்தில் இப்படி நடக்குமா, ஒரு பகுதியில் வாழும் அனைவருமே எப்படி நல்லவர்களாக இருப்பார்கள் என்று சக மனிதர்கள் குறித்த தீவிரச் சந்தேகங்கள் நிறைந்த, எந்த நம்பிக்கை உணர்ச்சியும் அற்ற கேள்விகள் எழுந்தன.
இப்படிக் கேள்விகள் எழும் காலத்தில் இதுபோன்ற ஒரு திரைப்படம் தேவை என்றே தோன்றுகிறது. நிஜத்திலிருந்து உத்வேகம் பெற்று, தான் முன்னிறுத்த - முன்மொழிய விரும்பும் கருத்தை - மாற்றத்தைக் கற்பனை கலந்து எழுத்துபூர்வப் படைப்புகள் கூறுகின்றன. அதுபோல் இந்தப் படமும் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும், மனிதர்கள் எதைத் தொலைத்துவிட்டார்கள் என்கிற மதிப்பீடுகளை முன்வைக்கிறது.