

இன்றைய காலக்கட்டத்தில், பள்ளியில் நடத்தப்படும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்களில் பெற்றோர்கள் தமது குழந்தைகள் குறித்துப் புகார் சொல்வதற்கு இணையாக, ஆசிரியர்களும் குழந்தைகள் குறித்து பெற்றோர்களிடம் குறைகூறுவதும் அதிகரித்திருக்கிறது. இதனால், சில பெற்றோர்கள் பள்ளிக் கூட்டங்களுக்கு வராமல் தவிர்த்துவிடுவதையும் உணர முடிகிறது.
கூட்டத்துக்கு வரும் பெற்றோர்கள், ‘குழந்தைகள் எங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறார்கள்’, ‘எதிர்த்துப் பேசுகிறார்கள்’, ‘செல்போன், சமூக வலைத்தளத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்’, ’ போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்’, ‘தவறான நண்பர்களுடன் பழகுகிறார்கள்’ என ஆதங்கங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
மாணவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும் ஆசிரியர்களைத் தாக்குவதும் எல்லா காலத்திலும் இருந்த ஒன்றுதான். இன்று சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட காலத்தில், இப்படியான செயல்கள் அதீதமாக நடப்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்படுகிறது.
எப்படிப் பார்த்தாலும் இன்று வகுப்பறைக்குள் நிகழும் வன்முறை அதிகரித்துவிட்டதைக் கவனிக்காமலும் விட முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் குழந்தைகள் மட்டுமே காரணம் அல்ல என்று நாம் சிந்திக்கத் தொடங்கினால் முன்னர் சொன்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
கசக்கும் நிதர்சனங்கள்: குறிப்பிட்ட வயதுவரை குழந்தைகள் தாங்கள் கற்றதை வெளிப்படுத்தத் தெரியாமல் தமது ஆழ்மனதிலேயே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். பெற்றோரிடம் கற்றுக்கொண்ட சொற்களையும் திரைப்பட, அரசியல் பிரமுகர்களின் வாசகங்களையும் பதின்ம வயதில் பேச்சிலும் பழக்கவழக்கத்திலும் குழந்தைகள் வெளிப்படுத்தும்போது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
குழந்தைகள் பார்த்தும் கேட்டும் கற்றுக்கொண்டதைச் செய்துபார்க்க முயற்சி செய்யும்போது நமக்குத் தவறாகப்படுகிறது. முன்னதாக அதே விஷயங்களைப் பார்ப்பதற்கும் கேட்பதற்குமான சூழல் உருவானபோது, அது நமக்குத் தவறாகப்படவில்லை என்கிற யதார்த்தத்துடன் இச்சூழலை அணுகினால் குழந்தைகள் தவறு அற்றவர்கள் என்பது நமக்குப் புரியும்.
குழந்தைகள் பேச்சைக் கேட்பதில்லை, எதிர்த்துப் பேசுகிறார்கள் என்று சொல்கிறோம். நமக்குப் பிடித்ததைக் குழந்தைகள் செய்யும்போது சரியாகவும் குழந்தைகளுக்குப் பிடித்ததை நம்மிடம் சொல்லும்போது அதைத் தவறாகவும் எடுத்துக்கொண்டு முரண்படுவதே இதற்குக் காரணம்.
நம் சொற்கள், செயல்கள் வாயிலாகவும்; நமது நண்பர்கள் உறவினர்கள் / சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் மூலமாகவும் கற்றுக்கொண்டதையே பதின்ம வயதில் அவர்கள் செய்யும்போது முரணாகத் தெரிகிறது. பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றிடம் மாட்டிக்கொண்ட சூழ்நிலைக் கைதிகளாகவே குழந்தைகள் இங்கே வளர்க்கப்படுகிறார்கள்.