

திறன்பேசிகளின் அதீதப் பயன்பாடு இன்றைக்குப் பெரியவர்கள் மட்டுமின்றிப் பதின்ம வயதினர் இடையேயும் சிறு குழந்தைகள் இடையேயும் அதிகரித்துள்ளது. அதீதப் பயன்பாட்டின் மூலம் பல்வேறு வகையான உடல் / மனநலப் பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பெற்றோர்கள் கண்டிக்கும்போது குழந்தைகள் விபரீதமான முடிவை எடுத்துவிடுகின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது?
பெரும் ஆபத்துகள்
இந்தியாவில் குழந்தைகளிடையே திறன்பேசி பயன்பாடு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. 2023இல் 5 - 14 வயதுடைய குழந்தைகளில் 6இல் 4 பேர் திறன்பேசிகளைப் பயன்படுத்தினர். இது 2020ஆம் ஆண்டில் ஆறில் ஒருவராக இருந்தது. நவீனத் தொழில்நுட்ப சாதனங்கள் பாடங்களையும் புதிய தகவல்களையும் கற்றுக்கொள்ள வழிவகுப்பதுடன், ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், பலன்களைவிடவும் பாதிப்புகள்தான் அதிகம். சிறு வயதிலிருந்தே பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளின் தாக்கம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் திரையைத் தொடர்ந்து பார்ப்பதால் அதிலிருந்து வெளிப்படும் நீல ஒளி கண் சோர்வை ஏற்படுத்தி, கண் வறட்சி, மங்கலான பார்வை, தூக்கமின்மை, கிட்டப்பார்வை, தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
உடல் பருமன், இதய நோய்கள், தசைக்கூட்டுப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரித்து ஒரு செயலற்ற வாழ்க்கை முறையை ஏற்படுத்துகிறது.
உடல்நலப் பாதிப்பைப் போல மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம், தனிமை உணர்வு, தன்னம்பிக்கை குறைவு, போதைக்கு அடிமையாகும் போக்கு, தற்கொலை எண்ணங்கள் எனப் பல்வேறு சிக்கல்களுக்குக் குழந்தைகள் ஆட்படுகின்றனர்.
டோபமைன் வலை
திறன்பேசித் திரைகளிலிருந்து உடனே விலக முடியாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதற்கு மூளையில் சுரக்கும் டோபமைன் (Dopamine) என்னும் வேதிப்பொருள்தான் காரணம். நாம் ஒரு நல்ல செயலைத் தொடர்ந்து செய்யும்போது இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து மனதுக்கு மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் தருகிறது என்பதால் இதை மகிழ்ச்சி ஹார்மோன் என்றும் அழைப்பது உண்டு.
இது குறையும்போது அச்சம், பதற்றம் ஏற்படுகிறது. சமூக ஊடகங்களில் வரும் ‘லைக்’குகள் அல்லது காணொளிகளில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் உடனடி மகிழ்ச்சியைத் தருவதால் மனதை விலக்கத் தோன்றுவதில்லை.