

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வரும் புத்தகக் காட்சிகள், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முக்கியமான அறிவுசார் நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. பொதுமக்கள் மத்தியில் புத்தக வாசிப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கடந்த அரசு முன்னெடுத்த இந்தத் திட்டம், பல்வேறு மாவட்டங்களில் இலக்கியம் மற்றும் கல்விசார் சூழலை உருவாக்கியதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளது.
பதிப்பாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்த நல்லெண்ண அடிப்படையில் அமைந்த இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சவால்கள் நிலவுகின்றன. இதை, பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் நிகழ்வில் பங்கேற்கும் அமைப்புகளின் அனுபவங்கள் அடிப்படையில் உறுதியாகச் சொல்ல முடியும். குறிப்பாக, மாவட்ட அளவிலான புத்தகக் காட்சிகள் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே அளவிலான வாசகர் வருகையையோ விற்பனை வாய்ப்புகளையோ உருவாக்கவில்லை.