

இந்தியாவில் 1881இல் ஆரம்பித்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக 2021இல் நடைபெற்றிருக்க வேண்டிய 16ஆவது கணக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது.
இந்தக் கணக்கெடுப்பில் மக்கள் தாங்களாகவே ஜூலை 31 வரை சுயமாக இணையத்தில் பதிவேற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. நகர்ப்புறத்தில் விழிப்புணர்வு உள்ள குடிமக்கள் இணையம் வழியாகப் பதிவுசெய்துள்ளனர். கிராமத்தில் இந்த விழிப்புணர்வு இன்னும் எட்டப்படவில்லை.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது வாடிக்கை. இந்த முறையும் மாவட்ட, மண்டல, வட்டார அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன. ஆனாலும் களப் பணியில் பல்வேறு சவால்களை ஆசிரியர்கள் எதிர்கொள்கிறார்கள்.
சிறு நகரங்களில் ஒற்றை இலக்க சதவீதமே சுயக் கணக்கெடுப்பு மேற்கொண்டு உள்ளனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கணக்கெடுப்பாளர்களுக்குச் செயற்கைக்கோள் மூலம் உருவாக்கப்பட்ட வரைபடத்தைக் கொண்டு, கணக்கெடுக்க வேண்டிய வீடுகளைச் செயலியில் நிரப்பச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. அதை அவர்கள் பின்பற்றிவருகிறார்கள்.
நடைமுறைச் சிக்கல்கள்
அந்த வரைபட எல்லையின்படி வெகு சில கணக்கெடுப்பாளர்களுக்குக் கிராமத்தில் 100க்கும் குறைவான வீடுகளும், பலருக்கு 600க்கு அதிகமான வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. அனைவரும் ஒரு மாதத்துக்குள் (ஆகஸ்ட் 31க்குள்) முடிக்க வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 3 மணி நேரம் பணியாற்ற வேண்டி உள்ளது.
மேலும், இந்தக் கணக்கெடுப்புப் பணிக்கு ஆசிரியர் விவரம் பெறப்பட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது. அதே வேளையில், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வண்ணம், இதற்கென நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குச் சுழற்சி முறையில் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கல்வித் தரத்தைப் பேணுவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.