உலகம் - முகங்கள் | கற்றதும் பெற்றதும் 2025

2025இல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த பிரபலங்கள்
உலகம் - முகங்கள் | கற்றதும் பெற்றதும் 2025
Updated on
2 min read

முதல் பெண் பிரதமர்கள்: நே​பாளத்தின் முதல் பெண் பிரதமர் ஆனார் சுசீலா கார்கி (73). அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிப​தி​யாகவும் பணியாற்றிய இவர், ஊழலுக்கு எதிராகப் போராடிய ஜென் இசட் இளைஞர்​களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரதமர் ஆகியிருக்​கிறார்.

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (64), 2025 அக்டோபர் 21இல் பதவியேற்​றார். 2025ஆம் ஆண்டின் ‘போர்ப்ஸ்’ இதழ் வெளியிட்ட உலகின் சக்தி​வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்​திருக்​கிறார். ஜப்பானின் ‘இரும்புப் பெண்’ என்றும் அழைக்​கப்​படு​கிறார்.

அதிரடி அதிபர்: அமெரிக்​காவின் 47ஆவது அதிபராக ஜனவரி 20 அன்று பதவியேற்ற டிரம்ப், குடியேற்ற விதிகளில் கடுமையான கட்டுப்​பாட்டைக் கொண்டு​வந்​தார். அவருடைய குடியரசுக் கட்சி தாக்கல் செய்த பட்ஜெட் நாடாளு​மன்​றத்தில் நிறைவேறாத​தால், வரலாறு காணாத நிர்வாக முடக்​கத்தை அமல்படுத்தி 43 நாள்கள் அமெரிக்காவை ஸ்தம்​பிக்க வைத்தார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), 6ஜி தொழில்​நுட்பம் போன்ற​வற்றில் கவனம் செலுத்​தி​னார். இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்து​வதில் வெற்றிகண்​டார். உக்ரைன் போரை நிறுத்து​வதில் மும்முரமாக ஈடுபட்​டிருக்​கிறார்.

பேசுபொருளான பிரதமர்: பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் 2025இல் பல்வேறு விஷயங்​களுக்காகப் பேசப்பட்டார். கல்வி, வெளியுறவுக் கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு​வந்தார். 50 ஆயிரம் குழந்தை​களுக்கு மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்​படுத்​தினார்.

எனினும், பல்வேறு நலத்திட்​டங்​களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால் எதிர்ப்​புக்கும் உள்ளானார். ‘அந்நியர்களின் தீவாக’ பிரிட்டன் மாறுவதாகப் பேசியதற்காக விமர்சிக்​கப்​பட்​டாலும், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்ததன் மூலம் கவனம் ஈர்த்தார்​.

பன்மைத்துவ மேயர்: நியூயார்க் நகர மேயராக ஸோஹ்ரன் மம்தானி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இவர் நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய, இந்திய வம்சாவளி மேயர். 1892க்குப் பிறகு அமெரிக்​காவின் மிக இளைய மேயர் என்னும் பெருமைக்​குரியவர். இவரது வெற்றி டிரம்ப்பின் பின்னடை​வாகக் கருதப்​படு​கிறது. இந்தியா விடுதலை பெற்றபோது நேரு ஆற்றிய புகழ்​பெற்ற உரையை மேற்கோள் காட்டி, தமது முதல் உரையை ஆற்றியதன் மூலம் ஸோஹ்ரன் கவனம் ஈர்த்​தார்.

சர்ச்சை ஆன அமைதிப்​ பரிசு: அமைதிக்கான நோபல் பரிசு (2025) பெற்ற முதல் வெனிசுவேலா பெண் மரியா கொரினா மச்சாடோ. 2011 முதல் 2014வரை வெனிசுவேலா தேசிய சட்டமன்ற உறுப்​பினராக இருந்​தவர். அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசியல் நிலைப்​பாடு​களைக் கடுமையாக எதிர்ப்​பவர்.

2024இல் அதிபர் தேர்தலில் போட்டியிட இவருக்குத் தடை விதிக்​கப்​பட்டது. எதிர்க்​கட்​சிகளை ஒருங்​கிணைத்துத் தேர்தலில் வழிநடத்​தி​னார். அமைதிக்குப் பங்களிக்காத இவருக்கு அமைதி நோபல் பரிசு வழங்கப்​பட்டது கடுமையாக விமர்​சிக்​கப்​பட்டது.

சிக்கலுக்கு உள்ளாகும் தலைவர்: வங்கதேச மாணவர் போராட்​டங்​களால் ஷேக் ஹசீனா ஆட்சி 2024இல் கவிழ்ந்த பிறகு, இடைக்கால அரசின் தலைவராகப் பொறுப்​பேற்ற முகமது யூனுஸ், 2025இல் பல்வேறு சர்ச்சை​களில் சிக்கி​னார். வங்கதேச மாணவர் தலைவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்ட / தாக்கப்பட்ட சம்பவங்​களுக்குப் பின்னால் இவரது அரசின் சதி இருப்பதாகக் குற்றச்​சாட்டு எழுந்துள்ளது.

தொழில​திபரின் ‘அரசியல்’ - உலகின் பெரும் தொழில​திபரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்​புக்கு வெளிப்​படையாக ஆதரவு திரட்​டியதுடன், அவரது நெருங்கிய நண்பராகவும் மாறினார். எனினும், டிரம்ப் கொண்டுவந்த புதிய வரி - செலவினச் சட்டத்தை எதிர்த்து அவருடன் மோதினார். அதேவேகத்தில் ‘அமெரிக்கா கட்சி’ என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கு​வ​தாகவும் அறிவித்​தார். பிறகு, டிரம்ப்புடன் சமரசம் ஏற்பட்​டதால் அத்திட்​டத்தைக் கைவிட்​டார்.

விண்வெளி நாயகி: நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லி​யம்ஸ், ‘போயிங் ஸ்டார்​லைனர்’ விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்​நுட்பக் கோளாறு காரணமாக 9 மாதங்​களுக்கு மேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்க நேரிட்டது. 2025, மார்ச் 18 அன்று பூமிக்குத் திரும்​பினார். இதன் மூலம் விண்வெளியில் மொத்தமாக 600 நாள்களைக் கடந்த இரண்டாவது வீராங்கனை ஆனார்.

போப்பின் காலநிலை அக்கறை: கத்தோலிக்கத் திருச்சபையின் 266ஆவது தலைவராகப் பொறுப்பு வகித்த போப் பிரான்சிஸ் (88) காலமானதை அடுத்து, சிகாகோவைச் சேர்ந்த ராபர்ட் ஃபிரான்சிஸ் பிரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வட அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் இவர். காலநிலை மாற்றம் குறித்து மிகுந்த அக்கறை காட்டும் இவர், வாட்டிகனை கார்பன் சமநிலை நாடாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார்.

ஓபன் ஏஐ ராஜா: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்​நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் சாம் ஆல்ட்​மேன். ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க்​குடன் இணைந்து 2015இல் தொடங்​கி​னார்.

உலகளாவிய கவனத்தை ஈர்த்து​வரும் ஏஐ தளங்களான சாட் ஜிபிடி, டால் - ஈ ஆகியவை இவரது ஓபன் ஏஐ நிறுவனத்தில் வடிவமைக்​கப்​பட்டவை. ‘வர்ள்ட்’ என அறியப்​படும் ‘வர்ள்ட் காயின்’ கிரிப்​டோகரன்சி திட்டம், பசுமை ஆற்றல் தொடர்பான ‘ஹீலியன் எனெர்ஜி’ நிறுவனம் ​போன்ற​வற்றிலும் ​முக்கிய முதலீட்​டாளர்.

உலகம் - முகங்கள் | கற்றதும் பெற்றதும் 2025
இந்தியா - முகங்கள் | கற்றதும் பெற்றதும் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in