

கோடையின் தகிப்பு தணிவதற்கு மேட்டூர் அணையைத் திறந்து காவிரியில் கொஞ்சம் தண்ணீர் விடுங்கள் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ‘ஆடி பிறந்து ஆடிப் பெருக்கும் வரவிருக்கிறது.
ஆடு, மாடுகளுக்கும் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும்’ என்பவை அவர்களின் மற்ற நியாயங்கள். அன்றாடம் குடிநீருக்காகத் திறக்கும் 1,000 கன அடியோடு கொஞ்சம் கூடுதலாகத் திறந்தால், கோடை தணியும் என்பது எதிர்பார்ப்பு. மனதை உலுக்கும் பரிதாபம் இது. காவிரியின் முதல்மடையான திருவையாறு பகுதி விவசாயிகளின் கோரிக்கை இதுவானால், கடைமடையின் நிலவரத்தை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.
காவிரிக் கரை பொழியத் தானாகப் பெருக வேண்டிய பருவம் ஆடி மாதம். ஆனால், அதற்கான அறிகுறிகளே இல்லை. இயற்கையின் இந்த ஆண்டுப் போக்கு இதுதான் என்று வைத்துக்கொள்வோம். ஆனாலும், முன்பெல்லாம் காவிரியின் மணல் செருமிய வயிற்றில் நூலாகச் சிலிர்த்து ஓடும் தண்ணீரும் இப்போது வருவது இல்லை.
இப்படி நாமாகவும் கோடையை நீட்டித்துக்கொள்கிறோமே என்பது விவசாயிகளின் கவலை. இன்றைக்கு இருக்கும் தண்ணீர் மேட்டூர் தேக்கத்தின் முழுக் கொள்ளளவில் 40 சதவீதமே. குறைந்த இருப்புதான் என்றாலும், கொஞ்சமாவது திறந்து காவிரியை நனைப்பதற்குக் கோரிக்கைவிடுக்கிறார்கள்.
உடம்பில் உறைக்கும் பருவங்கள்
முதியவர்களிடம் பேச்சுக்கொடுத்தால், ‘ஒரு கோடையில்...’ என்று தொடங்கி, பழைய சம்பவங்களை விவரிப்பார்கள். கோடையாக, அடைமழையாக, பனியாக, வாடைக்காற்றாக, தென்றலாக - இப்படி உடம்பில் உறைக்கும் நிஜங்களாக நம் முன்னோர்கள் காலத்தை உணர்ந்திருந்தார்கள். நாம் மாதத்தின் பெயராலும் ஆண்டின் எண்ணாலும் காலத்தை அறிகிறோம்.
பருவங்களின் அடையாளங்கள் அழிந்து, உருவம்கொள்ளாத பிண்டமாகக் காலம் நம் பிரக்ஞைக்குள் வரும். காவிரி விவசாயிகளின் இன்றைய கோரிக்கையைப் பார்த்தால், ‘ஆஹா! காலம் பழையபடி கோடை, குளிர் என்று நம் மேனி உணரும் பருவங்களாகப் பொதுப் பிரக்ஞைக்குள் திரண்டுவிட்டதே’ என்பது ஓர் ஆறுதல்.
கோடை முற்றிக் கடுங்கோடையாகிவிட்டது. கோடையில் பலன் தரும் மரங்களான மா, புளி எல்லாம் காய்ப்பு ஓய்ந்துவிட்டன. மூங்கில் இலைகூட வதங்கிச் சுருண்டு சருகாக உதிரக் காத்திருக்கிறது. தண்ணீர் கிடக்கும் குட்டையோ ஆற்று மடுவோ தென்பட்டால் செம்மறியாட்டுக் கிடை மண்டிச் சென்று, அவற்றைச் சூழ்ந்துகொள்கிறது.