

ஹபீப் வங்கதேசத்தவர். வயது 20. அவரது தந்தையின் கல்லீரல் பழுதுபட்டிருந்தது. நல்வாய்ப்பாக அவரது கல்லீரல் தந்தைக்குப் பொருந்தியது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு டெல்லியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையை அவர் தேர்ந்தெடுத்தார். ஏனெனில், இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு பல வளரும் நாடுகளைவிட மேலானது.
சிகிச்சைக்காக இங்கு வரும் வெளிநாட்டவருக்கு இந்திய அரசு ‘மருத்துவ விசா’ வழங்குகிறது. ஹபீப் தனது தந்தையை டெல்லி மருத்துவமனையில் சேர்த்தார்.
அவர், அவரது தாயார், சகோதரி ஆகியோர் மாளவியா நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கிக்கொண்டனர். சபிக்கப்பட்ட அந்த ஜூன் 3ஆம் நாள் விடுதியின் தரைத்தளத்தில் தீப்பற்றியது.
சடுதியில் அது ஆறு மாடிகளுக்கும் பரவியது. விடுதியில் எந்த அவசரக் கால வழியோ வாயிலோ இல்லை. முன் வாயில், ஒரு மின் கதவு; அதைத் திறக்க முடியவில்லை. மொட்டை மாடிக் கதவு பூட்டப்பட்டிருந்தது. விடுதி அமைந்திருந்த தெரு ஒரு கார் மட்டுமே போகக்கூடிய அகலம் கொண்டது.
நகரின் போக்குவரத்து நெரிசலைக் கடந்து, இந்தக் குறுகலான தெருவைத் தீயணைப்பு வாகனம் வந்தடைந்தபோது முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.
தீ யாருக்காகவும் காத்திருக்கவில்லை. சிலர் குழாய் வழியாக இறங்கத் தலைப்பட்டனர். பலர் ஜன்னல் வழியாகக் குதித்தனர். தீ அணைக்கப்பட்டதும், 49 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் 14 வெளிநாட்டினர் உள்பட 22 பேர் இறந்திருந்தனர். அந்த விடுதி தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழைப் பெறவில்லை என்பதும் ஆறு அறைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு 25 அறைகளுடன் இயங்கிவந்தது என்பதும் விபத்துக்குப் பிறகுதான் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. இது இந்த ஆண்டில் தலைநகரில் நிகழ்ந்துள்ள மூன்றாவது பெரிய தீ விபத்து.
விதிகள்
இப்படியான தீ விபத்துகளைத் தடுப்பதற்கான விதிகள் யாவை? எல்லா நாடுகளும் இதற்கான விதிகளை வகுத்திருக்கின்றன. அமெரிக்க விதிகள் முன்மாதிரியானவை (National Fire Protection Association, NFPA 1,13,25,72&101). பிரிட்டனும் (BS 9999), ஐரோப்பிய ஒன்றியமும் (EN 54), ஆஸ்திரேலியாவும் (AS 1851 & 2118) வகுத்திருக்கும் நெறிமுறைத் தொகுப்புகளைப் பல நாடுகள் பின்பற்றுகின்றன.
இந்தியாவின் தேசியக் கட்டுமான நெறிமுறை (National Building Code) 2016இல் மேம்படுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு விதிகளும் அடங்கும் (NBC 2016-பகுதி 4). இந்த விதிகள் பெரிதும் முன்னர் குறிப்பிட்ட மேலைநாட்டு விதிகளுடன் இயைந்து போகின்றன. இதில் முதன்மையான சில விதிகளைப் பார்க்கலாம்.