

“சிறிய விஷயங்களைக் கவனிப்பது எழுத்தாளர்களின் பணி என்று நினைக்கிறேன். அப்போதுதான் பொதுத் தன்மைகளில் இருந்து விலகி புதியவற்றைப் பார்க்க முடியும்.”
2024இல் லின் உல்மான் உடனான நேர்காணலில் ஆன் கார்சன் சொன்ன கருத்து இது. 2026ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கனடாவைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர், செவ்வியல் அறிஞர் ஆன் கார்சன்.
Eros the Bittersweet கட்டுரை நூல் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமான ஆன் கார்சன், செவ்வியல் எழுத்தும் நவீன எழுத்தும் இணைந்த நடையில் எழுதிவருபவர். குறிப்பாக, கிரேக்க - லத்தீன் புராணங்களை மாற்றுப் பார்வையில் அணுகும் இவரது படைப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. “செவ்வியல் மரபுடனான இடையீட்டு உரையாடல் வழியே நவீன இலக்கியத்துக்குப் புதிய வகைமைகளை உருவாக்கிய அவரது துணிச்சலான, புதுமையான படைப்பாக்கத்துக்காக விருது அளிக்கப்படுகிறது” என்றே நோபல் குழு தெரிவித்துள்ளது.
ஆன் கார்சனின் எழுத்துலகை முரண்பாடுகளின் இயங்கியலாக வகைப்படுத்தலாம். அதாவது, ஒரே உடலுக்குள், தளத்துக்குள் இருவேறு முரண்பாடுகள் செயற்படும் தன்மையை இவரது படைப்புகள் நுட்பமாகவும் ஆழமாகவும் விவாதித்திருக்கின்றன. Eros the Bittersweet (துயரங்கள் நிறைந்தவன், ஆனால் இனிமையானவன்) என்ற முதல் நூலின் தலைப்பிலேயே அதை உணரலாம்.
Autobiography of Red என்ற அவரது புகழ்பெற்ற கவிதைப் புதினத்தின் நாயகன் கிரேக்கப் புராண கதாபாத்திரமான கெரியான் (Geryon). கிரேக்கக் கவிஞர் ஸ்டெசிகோரஸ் எழுதியதன்படி கெரியான் அரக்க குணம் படைத்தவன்; ஹெராக்கிள்ஸால் கொல்லப்படுபவன். ஆன் கார்சன்
இந்தக் கதாபாத்திரத்தை நவீன உரையாடலுக்குள் இழுத்து வருகிறார். சிறு வயதிலேயே குடும்ப உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவன், மெய்யான அன்புக்கு ஏங்கியவன், தன்னைக் கொல்ல வந்தவன் எனத் தெரிந்தும் ஹெராக்கிள்ஸ் மீது அன்பு செலுத்தியவன் என்று மறுபிரதியாக்கம் செய்துபார்க்கிறார்.