

“டாக்டர், எனக்கு இந்தந்த அறிகுறிகள் இருக்கின்றன. இது என்ன நோயாக இருக்கும்?” இந்தக் கேள்வியை முன்பெல்லாம் குடும்ப மருத்துவரிடம் மட்டுமே மக்கள் கேட்டார்கள். இப்போது அதே கேள்வியைக் கைப்பேசியில் உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகளிடம் கேட்கிறார்கள்.
தலைவலி, வயிற்றுவலி, காய்ச்சல், மார்புவலி என எந்த அறிகுறியாக இருந்தாலும், சில விநாடிகளில் பல காரணங்களையும் செய்ய வேண்டிய பரிசோதனைகளையும் ஏஐ பட்டியலிடுகிறது.
இதனால் இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது: குடும்ப மருத்துவர் இருந்த இடத்தை இனி ஏஐ நிரப்பிவிடுமா? இதற்கான பதில் – இல்லை; குடும்ப மருத்துவருக்கு ஏஐ ஒரு வலுவான துணையாக இருக்க முடியும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
குடும்ப மருத்துவர் என்பவர் யார்?
குடும்ப மருத்துவர் என்பவர் நோய் வந்தபோது மட்டும் பார்க்கும் மருத்துவர் அல்ல. ஒரு பயனாளியின் மருத்துவ வரலாறு, பழைய நோய்கள், குடும்பத்தில் காணப்படும் நோய்கள், எடுத்துக்கொள்ளும் மருந்துகள், ஒவ்வாமைகள், வாழ்க்கை முறை போன்றவற்றைத் தொடர்ந்து அறிந்திருப்பவர். அதனால், அவர் பயனாளியின் நோயை மட்டும் பார்ப்பதில்லை; பயனாளியைப் பார்க்கிறார்.
ஒருவருக்குத் திடீரென ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு புதிய மருத்துவர் அந்த நேரத்தில் தெரியும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கச் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், குடும்ப மருத்துவருக்கு அந்த நோயாளியின் முந்தைய உடல்நிலை தெரிந்திருக்கும். குடும்ப வரலாறு தெரிந்திருக்கும்.
அதனால், அது தற்காலிக உயர் ரத்த அழுத்தமா அல்லது நிரந்தரமானதா என்பதையும் அவர் அறிவார். அவர் ஏற்கெனவே உட்கொள்ளும் மருந்துகள், சிறுநீரகம் அல்லது இதயம் தொடர்பான பிரச்சினைகள் அவருக்கு இருந்தனவா என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு புதிய சிகிச்சை தேவையா, பழைய சிகிச்சையைத் தொடர்வதா எனத் திட்டமிடுவார். இதுதான் குடும்ப மருத்துவத்தின் தனிச்சிறப்பு.