

பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா மீண்டும் வெற்றிபெற்றது அண்மைக் காலப் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இது தொடர்பான அரசியல் விவாதங்களைத் தாண்டி, காலநிலை மாற்ற / சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாட்டாளர்கள் இதை மிகப்பெரிய நம்பிக்கையாகப் பார்க்கின்றனர். குறிப்பாக, அமேசான் மழைக்காடுகளின் பாதுகாப்புக்கு லூலாவின் தலைமை புத்துயிர் அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கரிமச் சேமிப்பு
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மழைக்காடுகளில் மொத்தம் 150 பில்லியன் டன் கரிமம் சேமிக்கப்பட்டிருப்பதாக அறிவியலாளர் கார்லோஸ் நோப்ரே கணித்திருக்கிறார்.
இது 10 ஆண்டுகளுக்கான உலகளாவிய கரிம உமிழ்வு களுக்குச் சமம். இவ்வாறு அதிக அளவிலான கரிமம் சேகரிக்கப்படுவதன்மூலம் காலநிலை மாற்றம் தீவிரமடையாமல் தடுக்கப்படுகிறது. கரிமத்தைச் சேமிக்கும் இவ்வாறான அமைப்புகளை ‘Carbon sink’ என்று அழைப்பார்கள்.
உலகின் மிகப்பெரிய கரிமச் சேமிப்பு அமைப்புகளில் அமேசானுக்கு முக்கிய இடம் உண்டு. வெப்ப மண்டலக் காடுகளில் சேமிக்கப்பட்டிருக்கும் கரிமத்தில் பாதி இங்குதான் உள்ளது.
அமேசான் மழைக்காடுகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது, இவ்வாறு சேமிக்கப்பட்ட கார்பன் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்ந்து காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தும்.
கரிம சேமிப்பு மட்டுமல்லாது உயிர்ப்பன்மை, மழைப்பொழிவு, ஆக்சிஜன் உற்பத்தி போன்றவற்றிலும் அமேசான் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இங்கு வாழும் தொல்குடிகள் காடுகளைப் பாதுகாப்பதில் பல பங்களிப்புகளைச் செய்கின்றனர்.
அமேசான் காடுகளில் 60% பிரேசில் நாட்டின் எல்லைகளுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, பிரேசில் அரசின் சட்டங்களும் முடிவுகளும் அமேசானை நேரடியாகப் பாதிக்கின்றன. 2019 முதல் 2022 வரை பிரேசில் அதிபராக இருந்த ஜேர் பொல்சோனாரொவின் ஆட்சிக் காலத்தில் அமேசான் மழைக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.