

இந்திய மொழிகளுக்கும் ஆங்கில மொழிக்கும் இடையிலான உறவு குறித்த கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற கன்னட எழுத்தாளர்கள் ஓ.எல்.நாகபூஷணசாமி, எம்.எஸ்.ஆஷாதேவி, மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன், ஆங்கில எழுத்தாளர் கேஷவ குஹா உள்ளிட்டோர்.
தென்னிந்திய மொழிகள் மற்றும் வங்க மொழியின் இலக்கியப் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தி, மூத்த மற்றும் இளம் படைப்பாளிகளை ஒரே கூரையின் கீழ் இணைத்த ‘புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026’, பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரிய வளாகத்தில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை கோலாகலமாக நடைபெற்றது. ஐந்து பிரதான அரங்குகள், நான்கு சிற்றரங்குகளில் பல்வேறு அமர்வுகள், நூல் வெளியீடுகள், நேர்காணல்கள், கவியரங்குகள், சிறார் நிகழ்வுகள், புத்தகக் காட்சி என இந்த மூன்று நாட்களில் விழா வளாகம் முழுவதும் இலக்கியப் பரப்பு உயிரோட்டத்துடன் இயங்கியது.
தொடக்க அமர்வுகள்: தொடக்க நாளில், திவ்யா கலவள ஒருங்கிணைப்பில் ஓ.எல். நாகபூஷணசாமி, எம்.எஸ். ஆஷாதேவி, என்.எஸ். மாதவன், கேஷவ குஹா பங்கேற்ற அமர்வில், ஆங்கிலத்தை இணைப்புப் பாலமாகப் பயன்படுத்தினாலும், அது தாய்மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது என்ற ஒருமித்தக் கருத்து முன்னெழுந்தது.
‘நாட்டார் கதைகளும் சமூக வரலாறும்’ அமர்வை இரா. காமராசு தொடங்க, அ. கலையரசி, என். ராமச்சந்திரன், என். வடிவேலன் ஆகியோர் உரையாற்றினர். “மன்னர்களின் காலவரிசையை மட்டுமே வரலாறாகக் கொள்வது முழுமையாகாது, சமூகத்தின் ஆழ்மனப் பிரதிபலிப்புகளான வாய்மொழிக் கதைகள் வழியே இடைவெளிகளை நிரப்பும்போதே அது பூரணத்துவம் பெறுகிறது” என்ற ஆழமான பார்வையை காமராசு முன்வைத்தார். ‘என் வாசிப்பனுபவம்’ அமர்வில் பழனி. கிருஷ்ணசாமி, ரமேஷ் கல்யாண், தி.சிவக்குமார், சவிதா ஆகியோர் துறை சார்ந்த முதன்மை நூல்களை முன்வைத்துத் தம் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.