

உலகின் உணவு உற்பத்தியானது, தற்போதைய 800 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உணவு, ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்தில் உள்ளது. இருப்பினும் வறுமை, சமத்துவமின்மை, உணவுப் பொருள் பாதுகாப்புக் குறைபாடுகள், உள்ளூர் / உலக அரசியல் காரணமாக உலகின் பெரும்பான்மையான மக்களுக்குப் போதுமான அளவு உணவு சரிவரச் சென்றடையவில்லை.
ஐ.நா. அவையின் ‘உணவு - வேளாண்மை அமைப்பு’ (Food and Agriculture Organization-FAO) வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் தினமும் 25,000 பேர் பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக மரணமடைகிறார்கள்.மறுபுறம், முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவு உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துவருகிறது.
இதைச் சமாளிக்கும் வகையில் காலநிலை மாற்றத்தை எதிர்த்து நிற்கக்கூடிய பயிர்களை நாம் தேர்வுசெய்வது கட்டாயமாகி வருகிறது. மேலும் நிலைத்த வேளாண்மை நடைமுறைகளை (sustainable agriculture practices) விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் அவசியமாகின்றன. நிலையான உணவு உற்பத்திக்கு உயிர்ப்பன்மை (Bio diversity) பெருமளவில் உதவி புரிகிறது. ஆனால், அதைப் பற்றிய புரிதல் பரவலாக இல்லை.
காட்டு உறவினங்கள்: விவசாயத்துக்கு அடிப்படையான பயிர் ரகங்கள், வளமான மண், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை, பூச்சி, நோயைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றுக்கு உயிர்ப்பன்மை பெரிதும் உதவுகிறது. பல்லுயிர் பாதுகாப்புதான் நிலையான உணவு உற்பத்திக்கு அடித்தளம் என்பது உலக உணவு - வேளாண்மை அமைப்பு, உயிர்ப்பன்மை குறித்த ஒப்பந்தம் (CBD) போன்றவற்றின் கூற்றாகும். குறிப்பாக, விவசாய உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு என்பது தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையான உற்பத்தி, காலநிலை சார்ந்த சவால்களுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்.
இன்றளவும் நாம் பயிர் செய்யும் ரகங்கள் அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முன்பு வளமான காடுகளில் இருந்து எடுக்கப்பட்டவைதான். நாம் பரவலாகப் பயிர்செய்யும் உணவுத் தாவரங்களின் காட்டு உறவினங்கள் (Crop Wild Relatives) மரபணு வளங்களின் பொக்கிஷமாக இருந்து பயிர் மேம்பாடு, உணவுப் பன்மைப்படுத்துதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பொதுவாகவே, இந்தக் காட்டு உறவின ரகங்கள் நோய் எதிர்ப்புத்திறன், வறட்சி, வெள்ளம், வெப்பம், உப்புத்தன்மை போன்ற காரணிகள் ஏற்படுத்தும் அழுத்தங்களைத் தாங்கும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளன. இந்தச் சிறப்புப் பண்புகளின் மூலம் எதிர்காலக் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப ‘காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கும்’ அடுத்த தலைமுறைப் பயிர்களை உருவாக்குவது எளிது என்கிறது விவசாயத் தொழில்நுட்ப அறிவியல்.