

இந்திய இலக்கிய உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் 24 மொழிகளுக்கான 2025ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுகளை அறிவிப்பதற்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் புதுடெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக அகாடமியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மொழிக்காகவும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த நடுவர் குழுக்கள் பரிந்துரைத்த விருதாளர்கள் பட்டியலுக்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.
அதன் பின்னர் மத்திய கலாச்சார அமைச்சகத்திடமிருந்து வந்த திடீர் உத்தரவையடுத்து, விருது பட்டியல் அறிவிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், சாகித்ய அகாடமியின் 70 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், முதல் முறையாக விருது அறிவிப்பு நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.