

நாஞ்சில் நாடன், மனிதர்கள் நிறம் திரிந்து போவதை வலியோடு ஆராய்பவர். அவரது முக்கியமான கதை ‘சாலப்பரிந்து’. கதையில், கிராமத்தில் இட்லி சுட்டு விற்கும் காளியம்மாள் வருகிறாள். ஒரு குழந்தை பெற்றெடுத்த பிறகு, எங்கோ சென்றுவிட்ட கணவனைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், ஊரெல்லாம் நடந்து இட்லி வியாபாரம் செய்து மகனை படிக்க வைக்கிறாள். மகனுக்கு வேலையும் கிடைக்கிறது. வேலையில் இருக்கும் வசதியான பெண் சம்பந்தம் வர, திருமணத்தையும் நடத்தி வைக்கிறாள் காளியம்மாள்.
மருமகள் – மாமியாருக்குள் நேரும் உரசலை கூர்மையாக இரண்டே இடத்தில் தொடுகிறார் நாஞ்சில் நாடன். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நாகரிகக் குறைவாக கருதுவதாக மாமியாரை மேல்ச்சட்டை (ரவிக்கை) போடச்சொல்லி மருமகள் நெருக்குகிறாள். அவள் அதுவரை சட்டை அணியாது வாழ்ந்தவள் என்பதே அப்போதுதான் தெரிய வருகிறது.