

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிசெய்வதற்காக ‘மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (திருத்த) விதிகள், 2026’ஐ அண்மையில் வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை. புதிய விதிகளில் காலக்கெடுவுடன் கூடிய செயல்பாடுகள், அணுகல்தன்மை இணக்க அறிக்கைகள் (Accessibility Conformance Report - ACR), குறைதீர் அலுவலர்கள், அபராதங்கள் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவை வரவேற்கத்தக்கவை. ஆனால், இதுபோன்ற விதிகள் ஏற்கெனவே இருந்தும் நடைமுறையில் பலன் அளிக்காத நிலையே உள்ளது.
எனவே, புதிய விதிகளை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல் நிதி, நிறுவனத் திறன், தொழில்நுட்ப அறிவு, கண்காணிப்பு அமைப்பு ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உரிமை என்பது வெறும் நலத்திட்டப் பிரச்சினை அல்ல; அது ஓர் அரசியல் பார்வை.
அணுகல்தன்மை: அணுகல்தன்மையை நாம் மூன்று முக்கியப் பரிமாணங்களில் பார்க்க வேண்டும்: நேரடியானது, செயல்முறைரீதியிலானது, பொருள்/சேவைக்கானது. எடுத்துக்காட்டாக, ஒரு பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகக்கூடிய வகுப்பறை அமைத்துவிட்டால் மட்டும், அது முழுமையான அணுகல்தன்மையாகி விடாது. கற்பித்தல் முறை, கற்றல் நடைமுறை, தேர்வு எழுதும் முறை என அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.